அந்தக் கேள்வியை கேட்டுக் கேட்டு என் காது புளித்துவிட்டது. ஆனாலும் அந்த பழக்கத்தை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. இனியும் மாற்றிக்கொள்ள மாட்டேன்.இன்று தான் நான் என் சொந்த ஊரில் கால் பதிக்கப்போகிறேன் 6மாதங்களுக்குப் பிறகு. நான் பேருந்தில் இருந்து இறங்கியபொழுது மணி சரியாக மாலை 4:30. வெயில் சிறிது அடங்கிக்கொண்டிருந்தது. எங்கள் ஊருக்கு செல்ல 6மணிக்கு தான் பேருந்து என்பதால், அந்த ஒன்றரை மணி நேரத்தை அந்த பேருந்து நிலையத்தில் கழிக்கலாம் என்று முடிவெடுத்தேன். இங்கிருந்து எங்கள் ஊருக்குச் செல்ல 4மணிநேரம் எடுக்கும்.
அந்த பேருந்து நிலையத்தில் ஒரு ஓரமாக ஒரு வேப்பமரம் இருந்தது. அந்த வேப்பமர நிழலில் சென்று அமர்ந்தேன். அந்த வேப்பமரம் பசேலென இருப்பதைப் பார்க்கையில் முன்தினம் மழை வெளுத்துவாங்கியிருக்கிறது என்று தோன்றியது. அன்றும் இருட்டிக்கொண்டு தான் இருந்தது.
காற்றிற்கு அந்த வேப்பமர கிளைகளும் இலைகளும் ஆடுவது, 'மேகம் இருட்டுவதைப் பார்த்தால் இன்றும் மழையில் குதூகலமாக ஆடலாம்', என்ற குஷியில் ஆடுவது போல தெரிந்தது.
என்ன இன்று எனக்கு இவ்வளவு கற்பனைகள் ஊற்றெடுக்கிறது என்று ஒரு நிமிடம் சிந்திக்கையில் தான் புரிந்தது, 'ஆஹா..... இங்கே கைபேசியில் சிக்னல் கிடைக்காது' என்று. கைபேசியின் தொந்தரவு இல்லாததால் மட்டும் தான் இந்த ரசனை வந்ததோ????? இல்லை இல்லை..... இந்த இடத்தில் யார் இருந்தாலும் அவருக்கும் இதே உணர்வே ஏற்பட்டிருக்கும்.
மாலை நேரம் என்பதால் குழந்தைகள் ஆங்காங்கே விளையாடிக் கொண்டிருந்தனர். நான் அவர்கள் விளையாட்டை பார்த்து என் குழந்தை பருவ ஞாபகங்களை திருப்பி பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது அது என் கண்ணுக்கு தென்பட்டது. அதை ஒரு சிறுவன் கையில் வைத்திருந்தான். அதை மற்றொரு சிறுவன் அது தனக்கும் வேண்டும் என்பது போல் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த சிறுவனின் தோற்றம் அவனது ஏழ்மையை காட்டியது. ஆங்காங்கே வெள்ளை நிறத்தை காட்டிய அழுக்குத் சட்டை. செம்பட்டை முடி. மூக்கு ஒரு பக்கம் ஒழுகிக்கொண்டு, கண்ணில் ஆர்வம் கலந்த கண்ணீருடன் தோன்றினான் அந்த சிறுவன்.
இப்போது என் காதுகளில் அந்த கேள்வி மறுபடியும் ஒலித்தது. என்ன கேள்வி அது????? இப்போது என் பிள்ளை பருவத்திற்கு செல்வோமா?????
நான் 3வயதாக இருக்கும்போதே எனக்கு அந்தப்பழக்கம் ஒட்டிக்கொண்டது. பள்ளியில் படிக்கும்போது என் நண்பர்கள் இந்த பழக்கத்தால் கேலி செய்தனர். "இன்னுமாடா இத விடல நீ?????" என்று அடிக்கடி கேட்டு என்னை தொல்லை செய்வர். ஆனாலும் என்னால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை.
இப்படியே பள்ளி வாழ்க்கை செல்ல, கல்லூரியிலும் இதே கேள்வி என்னை பாடாய் படுத்தியது. "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்பது போல, நான் அதை விடவேயில்லை. கல்லூரியில் இப்படியென்றால், அலுவலகம் சென்ற பிறகு அதற்கும் மேல். தினமும் இதே கேள்வி என்னை துரத்தியது. நான் என்னை கட்டுப்படுத்த நினைத்தாலும் அதை பார்த்ததும் என் மனம் கட்டுப்பாட்டை இழந்தது.
இப்பொழுது பேருந்து நிலையத்தில் அதை பார்த்ததும் நிலைகொள்ளவில்லை. நேராக அருகில் இருந்த கடைக்கு சென்றேன். "அண்ணே, 2 லாலிபாப் குடுங்க," என்றேன்.
இவ்வளவு நேரம் நான் சொன்னது இந்த பழக்கத்தை பற்றி தான். 'லாலிபாப்' என்றால் எனக்கு மிகவும் பிரியம். நான் தினமும் விதவிதமான சுவைகளில் 'லாலிபாப்' சாப்பிடுவது வழக்கம். எப்போது என் பையை திறந்து பார்த்தாலும் அதில் 2-3 லாலிபாப்கள் இருக்கும். என்னதான் 5ரூபாய், 10ரூபாய், ஏன் 60ரூபாய்க்கு மிட்டாய்கள் வந்தாலும் அந்த 2ரூபாய் லாலிபாப்பில் இருக்கும் ருசி எதிலும் கிடைக்காது. அந்த லாலிபாப்பை நாக்கில் எச்சில் சொட்டச்சொட்ட ருசிக்கும் சுகம் இருக்கிறதே...... அடடா.....
பள்ளி காலத்திலும் சரி, கல்லூரி நாட்களிலும் சரி, இப்பொழுது அலுவலக படலத்தில் சரி நான் சாப்பிட்ட லாலிபாப்கள் எனக்கு சளிக்கவேயில்லை. நான் மட்டும் சுவைத்து அந்த சிறுவனை ஏமாற்ற விரும்பவில்லை. அவனிடம் ஒன்றை கொடுத்து, அவன் அதை எச்சில் ஒழுக ஒழுக உண்ணும்போது, இருவரும் ஒரு 'செல்பி' எடுத்துக்கொண்டோம். அதை நான் பிறகு முகநூலில் பதிவு செய்ய, அங்கே வந்த என் நண்பனின் கருத்து என்னை எரிச்சலாக்கியது. அவனது கருத்து : "இன்னுமாடா நீ இத விடல?????"
என்னவோ தெரியவில்லை 'லாலிபாப்' சாப்பிட எனக்கு காரணம் எப்படியும் கிடைத்து விடுகிறது. இன்று இந்த 'லாலிபாப்' மிகவும் சுவையாக இருந்தது. ஒருவேளை இன்று என்னிடம் கேள்வி கேக்காமல் 'லாலிபாப்' சாப்பிட ஒரு துணை கிடத்ததனாலோ என்னவோ..... எல்லோருக்கும் "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்றால், எனக்கு மட்டும் "லாலிபாப் பழக்கம் சுடுகாடு மட்டும்"
லாலிபாப்பை சுவைத்துவிட்டு பிறகு சந்திக்கிறேன்.....
Semma funny.. lolipop really semma sweet thaan.. 😉😉😉😉😉
ReplyDelete