காலம் என் காதலியோ.....

அன்று 25-05-2016 மாலை 5:00 மணி. அலுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்திற்கு காத்திருந்தேன். என்றும் இருக்கும் ஜன நடமாட்டம் இன்று இல்லை. அருகில் இருந்த மரப்பட்டறையும் விடுமுறை போல. கரும்புச்சாறு விற்கும் அக்கா கூட இன்று வேகமாகவே கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார். பேருந்து நிறுத்தத்தில் நான் மட்டும் நின்றிருந்தேன். தனிமை தான் ஆனாலும் பழக்கப்பட்ட இடம் என்பதால் பயம் இல்லை.

வேப்பமரத்து நிழலில் நின்று எதிரில் தெரிந்த திருப்பரங்குன்றம் மலையின் எழிலை ரசித்துக்கொண்டிருந்தேன். அந்த கருமேகங்களின் இடையில் யாரோ ஒரு ஓவியன் அழுத்தமாக வரைந்தது போன்று காட்சியளித்தது அந்த மலை. இப்பொழுது மெல்லிய சாரல் விழ ஆரம்பித்தது. ஆகா என்ன ஒரு அற்புதமான வானிலை மாற்றம். இந்த அக்கினி நட்சத்திர வெயிலில் வாடும் மக்களை பார்த்து வானவர்கள் வருத்தமுற்று அழுவதனால் விழும் கண்ணீர் துளிகளே இந்த தூய மழை துளிகளோ என்ற எண்ணம் தோன்றியது.

என்றும் 5:15க்கு வரும் பேருந்து இன்று 5:30ஆகியும் வரவில்லை. சரி அதுவரை இந்த மழையில் நனையலாம் என்று நினைத்து வேப்பமர அடியை விட்டு சற்று விலகி மழைத்துளி என் மேல் விழும்படி நின்றேன். ஆங்காங்கே சிலர் வந்து நிற்க ஆரம்பித்தனர். ஒரு 5-6 பேர். ஒருவர் எனக்கு பின். மற்றொருவர் இடது பக்கம். இன்னொருவர் வலதுபக்கம். என ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கம் நின்றனர். நான் எதையும் கவனிக்காமல் மழையில் நனைந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு சத்தம். திரும்பிப் பார்த்தேன் என் பின்னால் நின்றவர் கையில் இரத்தம் படிந்த கத்தியுடன் நின்றார்.

இந்த இரத்தம் யாருடையது????? அங்கே நின்ற அனைவரையும் பார்த்தேன். எல்லோரும் நன்றாகத்தான் இருந்தனர். பொறுங்கள்..... எனக்கு திடீரென கண்கள் மங்க காரணம் என்ன????? அப்படியானால் அந்த இரத்தம் என்னுடையது தானா????? ஆம், இப்பொழுது தான் கவனித்தேன் என் முதுகில் ஏதோ வலி புரிந்தது. குத்தப்பட்டது என் முதுகில் தான். அடுத்தடுத்து சரமாரியாக குத்தப்பட்டேன். அங்கே இருந்த அனைவரும் ஒரே கும்பல் தான். அனைவரின் கண்களிலும் ஒரு கொடூரமான கொலை வெறி. மொத்தம் 18 இடங்களில் குத்தப்பட்டேன். 19வது முறையில் நிலை தடுமாறி கீழே விழுந்தேன். நினைவு மறைந்தது.

அந்த மயான அமைதியில் என்னுடைய இதயத்துடிப்பின் சத்தம் மட்டும் மிகவும் மெதுவாக ஒலித்தது. அவர்களை அனுப்பியது யார்????? அவர்கள் என்னை கொலை செய்யும் அளவிற்கு நான் செய்தது என்ன????? உண்மையில் நான் யார்?????

Comments

  1. Thrilling story..உண்மையில் யார் அவன்??? சிக்கிரம் சொல்லுங்க bro..

    ReplyDelete

Post a Comment