போடுங்கண்ணே ஓட்டு

தேர்தல் நெருங்கிற்றுக்க நேரம். ஒவ்வொரு கட்சி தலைவர்களும் தங்களோட கட்சி தான் ஆட்சிய பிடிக்கணும்ன்னு மத்த கட்சிகள எவ்வளவு மட்டம்தட்ட முடியுமோ அவ்வளவு மட்டம் தட்டி பிரச்சாரம்ன்ற பேருல ஊரெல்லாம் மேடைய போட்டு கத்திகிட்டு இருக்குற பொன்னான சமயம் இது.

மேடைல மட்டுமா எந்த பக்கம் பாத்தாலும் கட்சியோட பேர் போட்டு, அதுல இருக்குற வேட்பாளர் கண்ணாடி போட்டு, மிடுக்க அலங்காரம் பண்ணிட்டு இருக்குற மாதிரியும் அவங்கவங்க கற்பனைக்கு எட்டுன அளவுக்கு அந்த வேட்பாளர விதவிதமா வடிவமைச்சு, 'நல்லவரே, வல்லவரே, தூணே, துணையே', அப்டி இப்டின்னு வாசகம் போட்டு, அதுக்கு கீழ 4-5 பேர் அங்கிட்டும் இங்கிட்டும் பாக்குற மாதிரி போஸ்டர் அடிச்சு ஒட்டி, ஒவ்வொரு வீடு சுவரையும் அலங்கோலப்படுத்தி வச்சுருபாங்க. அந்த 4-5 பேர் மூஞ்சிய அவங்க கண்ணாடில பாக்குறாங்களோ இல்லையோ, ஊர்ல இருக்க எல்லாரும் எந்நேரமும் பாக்குற அளவுக்கு செஞ்சு வச்சுருவாங்க. அதுக்காக அவங்க அவ்ளோ அழகுன்னு நான் சொல்ல வரலீங்கோ.....

இது பத்தாதுன்னு, டிவில எந்த சேனல் போட்டாலும் இவங்க தொண்டை கிழிய கத்துரத போட்டு சாவடிப்பாங்க. இன்னொரு பக்கம் நம்ம வீட்டு பொம்பளைங்க சின்ன பசங்கள திட்டி வெரட்டி விட்டுட்டு, ரிமோட்ட வாங்கி நாடகம் பாக்குறேன்ற பேர்ல கொல்லுவாங்க. ஆம்பளைங்களுக்கு செய்தி, பொம்பளைங்களுக்கு நாடகம், இளசுகளுக்கு கிரிக்கெட் இதவிட்டா நம்ம மக்களுக்கு என்ன தெரியுது. அப்ப தான் எனக்கு ஒரு ஞாபகம் வந்துச்சு. அது வேற எதுவும் இல்ல. 2 நாளைக்கு முன்னாடி நாங்க எடுத்த பேட்டி.

நான் படிக்கிற காலேஜ்ல தேர்தல், அரசியல் பத்தி ஒரு பேட்டி எடுக்கணும்ன்னு சொல்லி ஒரு க்ரூப் கெளம்புனோம். அதுல நிறைய விதமான மக்களை சந்திக்க முடிஞ்சுது. அந்த பேட்டிய பத்தி வெளக்கமா சொல்றேன் கேளுங்க. "யாருக்கு ஓட்டு போடுவீங்க" அப்டீன்ற ஒரு கேள்விக்கு எத்தன விதமான பதில் வந்துச்சுன்னு பாருங்களேன். எனக்கும் அரசியல்னா பிடிக்காதுங்க. ஆனா இந்த பேட்டிக்கு அப்பறம் நானும் ஆர்வமா அரசியல் கத்துக்க ஆரம்பிச்சுட்டேன்.

சுயதொழில் செய்யும் யாரோ ஒருவர் : இந்த ஆட்சியில பணம் எங்கயுமே வெளியேறல. அதனால என்ன மாதிரி சுயதொழில் பண்ற எல்லாருக்கும் ரொம்ப கஷ்டமான நேரம் இது. யாரு சுயதொழில் பண்றவங்களுக்கு நிதி உதவி செய்யிராங்களோ அவங்களுக்கு தான் என்னோட ஓட்டு.

வாக்கிங் சென்றுகொண்டிருந்த ஒருவர் : யாரு வந்தாலும் எந்த மாற்றமும் வரப்போறது இல்ல. அதனால ஒருநாள் லீவு கெடச்சுதுன்னு சந்தோஷமா வீட்ல ரெஸ்ட் எடுக்கப்போறேன். இந்த தடவ நான் ஓட்டு போடப்போறது இல்ல.

ஏதோ ஒரு வேட்பாளரின் ஆதரவாளர் : எங்கள் கட்சியுடன் கூட்டணி வைக்க மறுத்த அந்தக்கட்சி வெற்றி அடையப்போவது இல்லை. போன முறையை போல இந்தமுறை விட்டுவிட மாட்டோம். ஒவ்வொரு தொகுதியிலும் அதிக அளவு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். இரு ஏட்டில் என்றோ பொறிக்கப்பட்டது. எங்கள் தலைவரை முதல்வர் நாற்காலியில் அமர வைப்போம். இது உறுதி.

கல்லூரி மாணவி ஒருத்தி : அரசியல்ல இன்ட்ரஸ்ட் இல்ல.

கூலித்தொழிலாளி ஒருவர் : எந்த கட்சி அதிகமா சலுகை இலவசம் எல்லாம் குடுக்குதோ அந்த கட்சிக்கு தான் என்னோட ஓட்டு. நாங்களும் வசதியோட வாழணும்.


பட்டதாரி ஒருவர் : எங்கங்க படிக்கிறப்போ பீஸ் கட்டுறதுக்கு கஷ்டப்பட்டோம். படிச்சதுக்கு அப்பறம் கஷ்டம் இருக்காதுன்னு நெனச்சா வேலையே இருக்க மாட்டேங்கிது. எந்த கட்சி படிப்பையும், வேலைவாய்ப்பையும் இலவசமா குடுக்குறாங்களோ அவங்களுக்கு தான் என்னோட ஓட்டு.

பல்பொருள் அங்காடி உரிமையாளர் ஒருவர் : இப்போ எல்லாம் யாருமே கடைக்கி வந்து பொருள் வாங்குறது இல்ல. எல்லாமே ஆன்லைன் ஆயிடுச்சு. ஆன்லைன் வர்த்தகத்த நாட்டுக்குள்ள கொண்டுவந்து எங்க வயித்துல அடிக்கிறாங்க. ஆன்லைன் வர்த்தகத்த எந்த ஆட்சி முழுசா தடை செய்யுதோ அந்த ஆட்சிக்கு தான் என்னோட ஓட்டு.

டாக்டர் ஒருவர் : டாஸ்மாக் தான் இன்னிக்கி இருக்க பெரிய பிரச்சனை. அதனால இளைஞர்கள் நெறைய கெட்டு போயிட்டாங்க. எந்த கட்சி டாஸ்மாக் கலாச்சாரத்தை முழுசா தடை செய்யுறேன்னு உறுதியா சொல்றாங்களோ எந்த கட்சிக்கு தான் என்னோட ஓட்டு.

அப்போ திடீர்ன்னு கை தட்டுற சத்தம் கேட்டுச்சு. அந்தப்பக்கம் பாத்தா ஒரு 15-16 வயசு பையன் நிண்டு கைதட்டிகிட்டு இருந்தான். எனக்கு அவன பாத்ததும் அவன்கிட்டயும் அந்த கேள்விய கேக்கணும்ன்னு தோனுச்சு. அதுக்கு முன்னாடி அவன் ஏன் கைதட்டுனான்னு தெரியணும்ல. அத கேக்க அவன் பக்கம் போனோம்.

சிறுவன் : அண்ணா நீங்க எடுத்த பேட்டிய இவ்ளோ நேரம் பாத்துகிட்டு தான் இருந்தேன். எல்லாரும் ரொம்ப எதிர்பாக்குறாங்க.  அதுவும் அவங்க சுயநலத்துக்காக மட்டுமே யோசிக்கிறாங்க. அது மட்டும் தான் உண்மை.

எங்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. "ஏன் தம்பி அப்டி சொல்ற"ன்னு கேட்டேன்.

சிறுவன் : சுயதொழில்க்கு நிதி ஒதுக்கனும்ன்னு ஒருத்தர் சொன்னாரு. அது அவரோட சுயநலம் தான். அவருக்கு நிதி உதவி தேவைப்படுதுன்னு தெரிஞ்சுது. அப்பறம் ஒருத்தர் சொன்னாரு ஓட்டு போடமாட்டேன்னு. அது உங்க உரிமை சார். அத ஏன் விட்டுக்குடுக்கணும் நீங்க. சரியா தங்களோட முடிவ எடுக்க தெரியாத ஒருத்தர் தான் பின்வாங்குவாறு. அதான் அவரோட நிலைமை இப்போ.

அதுக்கு அப்பறம் ஒருத்தர் வந்து மேடைல பேசுற மாதிரி பேசுனாரு. தலைவர ஜெயிக்க வைப்போம். எங்களால முடியும் அப்டி இப்டின்னு. அவ்ளோ நம்பிக்கை இருக்க கட்சி எதுக்கு மத்த கட்சி கூட கூட்டணி வைக்கணும். அதிக ஓட்டு வித்யாசத்துல ஜெயிப்போம்ன்னு சொல்றவங்க போன தேர்தல்ல ஜெயிச்சுருக்கனுமே. ஏன் இதுவரைக்கும் நீங்க ஜெயிக்கல????? எல்லாம் வாய் பேச்சு தான்.

ஒருத்தர் சொன்னாரு அதிகமா சலுகை இலவசம் குடுக்குற கட்சிக்கு ஓட்டு போடுவேன்னு. இன்னொருத்தர் சொன்னாரு எல்லாத்தையும் இலவசமா குடுக்கணும்ன்னு. ஏற்கனவே நாம வாங்குன கடன் ஏகப்பட்ட '௦' அதிகம் ஆயிட்டே போகுது இதுல இது வேற.

அடுத்தது ஒருத்தர் ஆன்லைன்ல பொருள் வாங்குறது பத்தி சொன்னாரு. அதுக்கு கரணம் யாரு????? நம்ம ஒவ்வொருத்தரோட சோம்பேறித்தனம். பக்கத்துல இருக்க கடைல பொய் வாங்குறதுக்கு சோம்பேறித்தனம் பட்டுட்டு உக்காந்த எடத்துல எல்லாம் கெடைக்கனும்ன்னு ஆசைப்பட்டோம். இப்போ அவன் நல்லா வளந்துட்டான். திடீர்ன்னு அவன போக சொன்னா முடியுமா. அனுபவிச்சு தான் ஆகணும். விவசாயம் பண்ணி கஷ்டப்பட்டு அத சந்தைல வந்து விக்கிற விவசாயி கிட்ட பேரம் பேசுவோம். ஆனா எவனோ அனுப்புனத கொண்டுவந்து குடுக்குறவனுக்கு ஷிப்மெண்ட் சார்ஜ்ன்னு 100 ரூபா குடுப்போம். இதான் இன்னைக்கி நம்ம நிலைமை.

அடுத்தது டாஸ்மாக். இன்னைக்கி இருக்குற நிலைமைல டாஸ்மாக்க மூடுனா அத விட அதிகமா மறுவாழ்வு மையம் கட்டணும். ஏங்க அத அடியோட அழிக்கணும்னா அத இவ்ளோ தூரம் வளரவிட்டுருக்க மாட்டாங்களே. ஆரம்பிக்காமலேயே இருந்துருப்பாங்களே. இன்னைக்கி நம்ம நாட்டோட மொத்த வருமானத்துல அதிகபட்சம் வருமானம் வரது டாஸ்மாக்ல தான். அத மூடுவாங்களான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

இன்னைக்கி நம்ம நாட்டு அரசியல் இப்டி இருக்கதுக்கு முக்கியமான காரணம் யாரு தெரியுமா????? ஒரு அக்கா சொன்னாங்களே இன்ட்ரெஸ்ட் இல்லைன்னு. அவங்கள மாதிரி ஆளுக தான். அவங்களுக்கு அரசியல்ல இன்ட்ரெஸ்ட் இல்லன்னு சொல்றாங்களே அதுக்கு காரணம் என்ன தெரியுமா????? அவங்களுக்கு அரசியல் தெரியாதது தான். அத தெரிஞ்சுக்க அவங்க விரும்பல. அவங்களே தெரிஞ்சுக்க ஆசப்பட்டாலும் நம்ம அரசியல்வாதிங்க தெரிஞ்சுக்க விட மாட்டாங்க.

நாம தான் இன்னும் மைக் கேமரா பிடிச்சுகிட்டு இப்டி பேட்டி எடுத்துக்கிட்டு இருக்கோம். ஆனா ஒவ்வொரு அரசியல் கட்சியும் ரொம்ப முன்னேறிட்டாங்க. அவங்களுக்குன்னு தனி டிவி சேனல். அதுல அவங்களோட தேர்தல் அறிக்கை. அத விட அதிகமா எதிரணிய மட்டம் தட்டுற விளம்பரங்கள். இது தேர்தல் முடியுற வரைக்கும் தான்.

எங்க ஏதாச்சும் ஒரு அரசியல்வாதிய தேர்தல் முடிஞ்ச அப்பறம் அவங்களோட தேர்தல் அறிக்கைய அவங்க சேனல்ல போடா சொல்லுங்க பாப்போம். போட மாட்டாங்க. அப்டியே போட்டாலும் நம்ம மக்கள் அத கண்டுக்க போறது இல்ல. இது அவங்களுக்கு நல்லாவே தெரியும். "முடியட்டும்... விடியட்டும்... சொன்னத செஞ்சீங்களா..... மக்களுக்காக நான் மக்காளால் நான்....."ன்னு கத்திகிட்டு இருந்தவங்க தேர்தலுக்கு அப்பறம் "உலக தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாக"ன்னு கத்துவாங்க. அதையும் நாம வாய பொளந்து பாத்துகிட்டு இருப்போம்.

ஒவ்வொருத்தரோட ஆசையும் நடக்கணும்னா ரெண்டே வழிதான் இருக்கு. ஒன்னு ஆட்சியில இருக்கவங்க நமக்கு வேலை பாக்க நாம தேர்ந்தேடுத்தவங்க. அதனால நம்ம தேவைய அவங்க செய்யலன்னா அவங்க கிட்ட அதிகாரமா கேக்கணும். அத நாம இதுவரைக்கும் செஞ்சதே இல்ல. ரெண்டாவது ஒவ்வொருத்தரும் முதலமைச்சர் ஆகணும். அது சாத்தியம் இல்லாத ஒன்னு. அப்டியே அது சாத்தியமானாலும் அவங்களோட உரிமைய கேக்கவே பயப்டுற நம்ம மக்கள் அரசியல்ல எறங்குறது சந்தேகம் தான்.

இப்டி சொல்லி முடிச்சான். எல்லாரும் ஒரு நிமிஷம் வாயடச்சு போயிட்டாங்க. "அப்போ உன் ஓட்டு யாருக்கா இருக்கும்"ன்னு கேட்டேன்.

அவன் சிரிச்சுக்கிட்டே சொன்னான். "எனக்கு ஓட்டுரிமை வர இன்னும் 3 வருஷம் இருக்கு. அதுக்குள்ள நீங்க ஏதாவது மாற்றம் கொண்டுவருவீங்கன்னு நம்புறேன்"ன்னு சொல்லீட்டு நடந்து போயிட்டான்.

உண்மைலேயே ஏதாவது மாற்றம் கொண்டுவரணும். இளைஞர்கள் அரசியல் கத்துக்கணும். விளையாட்டு, படிப்பு, சம்பாத்தியம் மட்டும் வாழ்க்கை இல்ல. அரசியலும் நம்ம வாழ்க்கைக்கு தேவையான ஒன்னு தான். இத புரியவச்ச அந்த பையனுக்கு நன்றி.....

என் ஓட்டு..... என் உரிமை.....

Comments

  1. Super anna ela students um kandipa politics pathi terinjukanum........ kandipa vote podanum

    ReplyDelete
  2. நன்றி சகோதரி.....

    ReplyDelete
  3. Semma topic... politics interestingana onnu thaan but youngsters involve aavarathu romba koravaa irukku.. nice attempt.. all the best...😊😊😊😊😊😊

    ReplyDelete

Post a Comment