காதலுடன் ஓர் பயணம் - பாகம் -1

பொன்னை உருக்கி வான்வெளியில் ஊற்றியது போல கதிரவனின் துயில் எழுச்சியால் வானம் தங்கமென மின்னிக்கொண்டிருந்தது. சூரியன் சோம்பல் முறிக்கையில் அவனது கரங்கள் பட்டதால் வெட்கமுற்ற பனித்துளிகள் ஆவியாகி அவனையே சரணாகதி அடைய விண்ணை நோக்கி சென்றுகொண்டிருந்தன. திங்களின் வரவிற்காக இரவெல்லாம் காத்திருந்த மலர்கள் எல்லாம் உற்சாகம் அடைந்தாற்போல தங்கள் மலர்ந்த முகங்களை காட்டத்தொடங்கின. 

கிளிகளும், குயில்களும், காகங்களும், புறாக்களும், குருவிகளும் தங்கள் இனப்பறவைகளுடன் சேர்ந்து அழகாய் தத்தம் கான மழையை பொழிந்துகொண்டிருந்தன. ஆகா..... என்னே ஒரு அற்புத உதயம் இந்த நாயகனுக்கு. இவனுக்காக எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள் அவனுக்கு. தினமும் வருபவன் தான் ஆனாலும் இந்த மலர்களும் பறவைகளும் அவனுக்காக எத்தனை இனிமையான வரவேற்பு அளிக்கின்றன.

காற்றை கிழித்துக்கொண்டு 'தடக்..... தடக்.....' என்று தாளமிட்டுக்கொண்டு, எங்கோ அவசரமாக கச்சேரி செய்ய ஒத்திகை பார்த்துக்கொண்டு ஓடுவது போல, கண்ணில் கண்ணீரை வரவழைக்கும் வேகத்தில் பறந்துகொண்டிருந்தது அந்த மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில். அதில் ஒரு பெட்டியின் ஜன்னல் ஓரத்தில் ஒரு இளைஞன் தன் கன்னத்தில் கை வைத்தபடி, தோளில் ஒரு பெண் தலை சாய்த்திருக்க, மேல் சொன்ன உதயத்தை கண்ணில் நீருடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்ணின் நீர் கோலத்தின் காரணம் சோகம் அல்ல. அந்த ரயில் வண்டியின் வேகம் தான் காரணம்.

அந்த இளைஞன் தான் நான். என் தோளில் சாய்ந்து என்னை அணைத்துக் கொண்டிருக்கும் பெண் என் காதலி. இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது எங்கள் முதல் சந்திப்பு..... அதை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வரும். அப்படி என்ன நடந்தது அன்று????? சில ஆண்டுகள் பின் நோக்கி செல்வோம்.

அன்று கல்லூரி முதல் நாள். வெவ்வேறு பள்ளியில் பாடம் கண்ட குயில்கள் ஒரே கூட்டில் கூடியிருந்தன. நானும் அந்த குயில் கூட்டத்தில் ஒருவன். அவளும் அதே கூட்டத்தில் ஒருத்தி தான். ஆனால் எங்கள் முதல் சந்திப்பு அது அல்ல. அது நடந்தது கல்லூரி ஆரம்பித்த 2வது மாதத்தில்.

அன்று 18-10-2010 திங்கள்கிழமை மாலை 4:00மணி..

கல்லூரி முடிந்து நான் பேருந்தில் வந்து இறங்கினேன். என்றும் வரும் வழியில் வராமல் ஏனோ இன்று பேருந்து மாற்று வழியில் வந்தது. நான் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அப்போது யாரோ என்னை அழைப்பது போல் ஒரு எண்ணம். அதை பொருட்படுத்தாமல் நடந்தேன். மறுபடியும் அதே குரல். திரும்பிப் பார்த்தேன். அங்கே அவள், 'சத்யா.....', என்று என் பெயரை உச்சரித்து நின்றிருந்தாள். அதுவரை நான் அவளிடம் பேசியது இல்லை. அவளை எதிரில் கண்டதும் கிடையாது. முதன்முதலாக அவளை பார்த்தேன்.

'இவ நம்ம கிளாஸ் தானே.. இவ பேரு கூட.... ஸ்..ஸ்..ஸ்வேதா... ம்ம் ஆமா, இவ பேரு ஸ்வேதா தான்.' என்று எனக்குள் ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு அவளை உற்று கவனித்தேன். ஓரிடத்தில் நிற்காமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்த கருவிழிகள். ஏதோ பயமும் தயக்கமும் கலந்த உணர்வால் வில்லென மேலெழுந்து நின்ற புருவங்கள். அந்த இரு புருவங்களுக்கும் மத்தியில் கரு வட்ட பொட்டின் மேல் சிறு கோடாக அவள் இட்டிருந்த சந்தனம். அவள் அவ்வளவு சிவப்பு அல்ல... என்பதால் அந்த சந்தனம் அவளது நிறத்திற்கு எடுப்பாக இருந்தது. பதட்டத்தில் என்ன செய்வதென்று அறியாமல் அந்த இதழ்களை அவள் படுத்திய பாடு... ஐயோ... என்ன ஒரு வசீகரம்??... காதில் ஆடிக்கொண்டிருந்த தோடு அவளது கன்னங்களை அவ்வப்போது தொட்டுச்செல்லும் ஒவ்வொரு முறையும் எனது இதயம் அதற்கு தாளமிடுவது போல துடித்தது. ஏதோ சொல்ல வந்து அதை சொல்ல முடியாமல் தயங்கும் முக பாவனை. பச்சை வண்ண சுடிதார் அணிந்து தோளில் பை அணிந்து என் முன் நின்று நெளிந்துகொண்டிருந்தாள். நான் கண்கொட்டாமல் என்னை மறந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தேன்.

திடீரென அவள் இதழ்கள் விடுபட்டு அசைவதை கண்டேன். சில நேரத்திற்கு பிறகு தான் உணர்ந்தேன் அவை என் பெயரை தான் உச்சரிக்கின்றன என்று. தூக்கத்தில் இருந்து எழுந்தவன் போல நினைவிற்கு வந்தேன்.

சத்யா : சொல்லுங்க...

ஸ்வேதா : இல்ல சத்யா... நாங்க இங்க புதுசா குடிவந்துருக்கோம்...

சத்யா : சரி...

ஸ்வேதா : எனக்கு இங்க எந்த வழியும் தெரியாது...

சத்யா : சரி...

ஸ்வேதா : யாரையும் தெரியாது... அதான்...

சத்யா : சும்மா சொல்லுங்க...

ஸ்வேதா : எங்க வீட்டுக்கு போகணும்... சிம்மக்கல் எப்டி போகணும்ன்னு சொல்றியா??.....

அவள் இப்படி கேட்டதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரிக்க ஆரம்பித்தேன். முடிவில்லாமல் நீண்ட என் சிரிப்பு அவளது முகத்தை கண்டதும் அடங்கியது.

ஸ்வேதா : என்ன.. ஏன் சிரிக்கிற?????

சத்யா : சாரி... நீ இப்போ சிம்மக்கல்ல தான் நிக்கிற.

ஒரு அசட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு தன் தலையில் அடித்துக்கொண்டாள். அப்போது அவளது கைகளில் இருந்த வளையல்கள் ஒன்றோடொன்று இடித்துக்கொண்டு 'கல கல' என  சிணுங்கின. பின்பு அவள் கூறிய அடையாளாங்களை ஊகித்து அவளை அவளது வீட்டில் சேர்த்தேன். மறுபடியும் ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்து "தேங்க்ஸ்", என்றாள். நானும் புன்னகைத்துவிட்டு வீடு திரும்பினேன். அன்று முதல் எங்கள் நெருக்கம் அதிகரித்தது.

நெருங்கிய நண்பர்களாக பழகிவந்தோம். அரட்டை அதிகரித்தது. நெருக்கமும் அதிகரித்தது. எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக சென்றோம். கல்லூரியில் மட்டும் அல்ல, வெளியே ஒரு உணவகத்திற்கு சென்றாலும் கூட இருவரும் இணைந்தே செல்ல ஆரம்பித்தோம்.

என் மனதில் முதல் சலனம் ஏற்பட்ட நாள் எனக்கு நினைவிற்கு வருகிறது. அன்று அவளிடமிருந்து திடீரென என் கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

சத்யா : ஹாய்... என்ன திடீர்னு கால் பண்ணிருக்க???

ஸ்வேதா : இல்ல சத்யா கொஞ்சம் ஹாஸ்பிடல் வர போகணும். அதான் உன்ன துணைக்கு குப்டலாம்ன்னு.....(இழுத்தாள்)

சத்யா : இவ்ளோதானா????? இதுக்கு ஏன் இவ்ளோ இழுக்குற????? இன்னும் 15 நிமிசத்துல உங்க வீட்ல இருப்பேன்.

ஸ்வேதா : சரி சத்யா.....

நானும் அவளது வீட்டிற்கு சென்றேன். இருவரும் பேருந்தில் சென்றோம். அன்று அவள் ஒரு பிங்க் நிற சுடிதார் அணிந்திருந்தாள். இன்னும் நினைவிருக்கிறது. என் அருகில் அமர அவள் காட்டிய தயக்கம் எனக்கு அவளது முகபாவனையில் இருந்து புரிந்தது. நானும் வேறு இருக்கையில் அமர்ந்தேன். எங்கள் நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கினோம். அவள் என் அருகில் நடக்க ஆரம்பித்தாள். வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் தனது சுடிதாரின் ஷாலை தலையில் போர்த்திக்கொண்டு நடந்தாள். அவ்வப்போது நாங்கள் இருவரும் தீண்டிக்கொள்ள நேர்ந்தது. பேசிக்கொண்டும் விளையாடிக்கொண்டும் மருத்துவமனையை அடைந்தோம்.





-பயணம் தொடரும்...

Comments

  1. Simple and nice... padikka interestingha irukku bro.. keep it up..

    ReplyDelete

Post a Comment