அவனாக நான்.....

ன் பெயர் கிருஷ்ணா. நான் பெங்களூர் வட்டாரத்தில் ஒரு அனாதை இல்லத்தில் வளர்ந்தவன். நிறைய நண்பர்கள் சொந்தங்கள் என்னை சுற்றி இருக்கவேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் அந்தக் கடவுள் எனக்கு அந்த வரத்தை கொடுக்க மறந்துவிட்டார். இருந்தாலும் நான் குறும்புத்தனமாக இருந்து வந்தேன். அன்று அவனைப் பார்க்கும் வரை என் வாழ்க்கை அப்படி மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை.

அவன் பெயர் அசோக். அப்போது அவன் யார் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை. அவன் எந்த ஊர், எங்கிருந்து வந்தான், அவனுக்கு என்ன நடந்தது என்றும் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரே ஒரு விஷயம் அவன் என்னைப் போல இருப்பான் என்பது மட்டுமே.



அன்று 13-3-2011 இரவு 11:30 மணி,

இரவு வெகுநேரம் ஆகியும் நான் இல்லத்திற்கு செல்லாமல் என் நிலையை பற்றி எண்ணிக்கொண்டு தெருவில் வந்துகொண்டிருந்தேன். அப்போது திடீரென ஒரு கார் என்னை வேகமாக கடந்து சென்றது. என்னை இடிப்பதுபோல் சென்ற அந்த காரின் டிரைவரை திட்டிவிட்டு என் வழியில் நடந்தேன். அப்போது ஒரு முனங்கல் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையில் பார்த்தேன். அங்கே ஒரு 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் முகத்திலும் உடலிலும் ரத்தத்துடன் துடித்துக்கொண்டிருந்தான்.


எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவன் முகமும் சரியாக தெரியவில்லை. அவன் அந்த நேரத்திலும் என்னிடம் ஏதோ சொல்ல முயன்றான். என் முகத்தை தொட்டுப்பார்த்தான். அவன் கையில் இருந்த ரத்தம் என் முகத்தை சிகப்பாக்கியது. அவன் உயிரும் பிரிந்தது. என் கண் எதிரில் ஒருவனின் உயிர் பிரிந்தது என்னை பாதித்தது.


அப்போது திடீரென ஒரு அடி என் தலையில் விழுந்தது. என்னை தாண்டிச்சென்ற கார் மீண்டும் வந்திருப்பதையும் அதில் இருந்து இறங்கிய ஆட்கள் தான் என்னை அடித்தனர் என்றும் தெரிந்தது. ஒரு கூட்டம் என்னை சூழ்ந்திருக்க மற்றொரு கூட்டம் அந்த இளைஞனின் சடலத்தை தூக்கி காரில் போட்டது. மீண்டும் அவர்கள் என்னை தாக்க வர அதற்குள் இன்னொரு பக்கம் மக்கள் சத்தம் கேட்டு என்னை அப்படியே விட்டு சென்றனர்.


அரை மயக்கத்தில் இருந்த என்னை ஒரு மாணவர் கூட்டம் தூக்கியது மட்டும் எனக்கு தெரிந்தது. முழுவதுமாக மயக்கமடைந்தேன். கண் விழித்து பார்த்தபொழுது என்னை சுற்றி ஏராளமானோர் கண்ணீருடன் நின்றிருந்தனர். நான் இதுவரை பார்த்திராத முகங்கள் எனக்காக கண்ணீர் விடுவது எனக்கு புதிதாக இருந்தது. வியப்பாக இருந்தது.


நான் கண் திறந்ததை பார்த்தவர்கள் உடனடியாக மருத்துவரை அழைத்தனர். அப்போதுதான் உணர்ந்தேன் நான் ஒரு மருத்துவமனையில் இருக்கிறேன் என்று. வந்த மருத்துவர் என்னை சோதனை செய்துவிட்டு, "என்ன அசோக் இப்ப எப்டி இருக்க?????", என்று கேட்டார். "பரவால்ல டாக்டர்", என்று கூறி எழ முயன்றேன். முடியவில்லை. "ஸ்டெயின் பண்ணிக்காத", என்று கூறி அங்கு இருந்த ஒரு தம்பதியினரிடம் சென்று, "உங்க பையன் நார்மல் ஆய்ட்டான். நீங்க நாளைக்கி காலைல அவன வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்", என்று கூறி சென்றார். அந்த டாக்டர் என்னை 'அசோக்' என்று கூறியது எனக்கு வியப்பாக இருந்தது. அதுவும் என்னை அவர்களின் மகன் என்று கூறியது இன்னும் அதிர்ச்சியை தந்தது. இருந்தாலும் தனிமையில் வாழ்ந்த எனக்கு இத்தனை உறவுகள் உள்ளன என்ற எண்ணம் தோன்றியது. இதன் காரணம் தான் என்ன????? யார் அந்த அசோக் என்று அறிய எண்ணி அவர்கள் போக்கிலேயே சென்றேன்.


போலீசார் வாக்குமூலம் வாங்க வந்திருந்தனர். "என்ன அசோக், இப்போ பரவால்லையா?????", என்றார் அந்த காவலர். "பரவால்ல சார்", என்றேன். "சரி, என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?????", என்று கேட்டார். "நான் வந்துற்றுந்தேன் அப்போ ஒருத்தன் அடிபட்டு கெடந்தான் வயசு ஒரு 20 அல்லது 21 இருக்கும். அவன் கிட்ட போனேன். அவன் என் முகத்த தொட்டுட்டு அப்டியே ஏதோ சொல்ல வந்தான். ஆனா அதுக்குள்ள உயிர் போய்டுச்சு. அப்போ திடீர்னு யாரோ என் தலைல அடிச்சுட்டாங்க. அப்பறம் அவன தூக்கிட்டு போய்ட்டாங்க. என்ன தாக்க வந்தப்போ இந்த ஸ்டூடெண்ட்ஸ் சத்தம் கேட்டு ஓடிட்டாங்க", என்றேன். "அந்த பையனோட முகம் ஞாபகம் இருக்கா?????", என்று கேட்டார். "இல்ல சார் அவன் முகம் எல்லாம் ரத்தமா இருந்துச்சு. வேற யாரையும் எனக்கு ஞாபகம் இல்ல", என்றேன். "சரி. ரொம்ப நன்றி அசோக். உடம்ப பாத்துக்கோ", என்று கூறி கிளம்பினர்.


அவரும் என்னை 'அசோக்' என்று அழைத்தது என்னை இன்னும் குழப்பியது. மறுநாள் என்னை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். கார் மதுரையை நோக்கி பறந்தது. 10மணி நேர பயணத்தின் முடிவில் அவர்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.


அது ஒரு நடுத்தரக்குடும்பம் தான். என்னை ஒரு அறையில் படுக்கவைத்துவிட்டு, "நல்லா ரெஸ்ட் எடு", என்று கூறி சென்றனர் அந்த தம்பதியினர். நானும் ஓய்வு எடுக்க கட்டிலில் படுத்தபோது பெரிய அதிர்ச்சி என் எதிரில் இருந்ததை கவனித்தேன். என் எதிரில் இருந்த சுவற்றில் ஒரு புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தில் அந்த தம்பதியினர் என்னுடனும் அவர்களது மகளுடனும் நின்றிருந்தனர். அப்போது தான் புரிந்தது. அது நான் இல்லை. நிச்சயமாக அவன் தான் அசோக்காக இருக்க வேண்டும். என்னைப்போலவே இருக்கிறான். அதனால் தான் என்னை எல்லோரும் 'அசோக்' என்று அழைத்திருக்கின்றனர் என்று புரிந்தது.


இப்போது அந்த அசோக் எங்கே?????


குழப்பமும் பயமும் என்னை சூழ்ந்திருந்தது. தூக்கம் வரவில்லை. அந்த அறையில் இருந்த அவனது புகைப்படங்கள் என்னை படபடக்கச்செய்தன. கையில் கிடைத்த செய்தித்தாளை திருகியபடி யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு செய்தி என் கண்ணில் பட்டது. இன்னும் அதிர்ச்சி பெருகியது.


'பெங்களூர் ரோட்டுல் இளைஞர் பிணம் கண்டெடுப்பு. விசாரனையில் அனாதை இல்லத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்ற இளைஞன் என்று தெரிய வந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.'


இச்செய்தியை படத்துடன் கண்டதும் என் இதயத்துடிப்பு அதிகரித்தது. தான் இறந்துவிட்டதாக தன் புகைப்படத்துடன் செய்தியைக் கண்டால் எவருக்கும் அதிர்ச்சி வரத்தான் செய்யும். அப்போது தான் புரிந்தது அந்த அசோக் இப்போது உயிருடன் இல்லை என்று. அவர்களிடம் உண்மையை சொல்லிவிட்டு சென்றுவிடலாம் என்று நினைத்த எனக்கு, நான் மருத்துவமனையில் கண் விழித்ததும் அவர்கள் அனைவரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி நினைவிற்கு வந்தது. அந்த மகிழ்ச்சியை நான் அவர்களிடம் இருந்து பறிக்க நினைக்கவில்லை. அதே நேரத்தில் இவர்கள் அனைவரும் இறைவனும் அந்த அசோக்கும் எனக்காக விட்டுச்சென்ற சொந்தங்கள் என்று தோன்றியது. அதனால் அவர்களை விட்டு பிரிய மனம் இல்லாமலும் ஒரு சுயநலத்தினாலும் நான் அசோக்காக மாற முடிவு செய்தேன்.


என்னதான் நான் பார்க்க அவனைப்போல இருந்தாலும் பழக்கவழக்கங்கள் மாறும். எனவே அவனது பழக்கவழக்கங்களை முதலில் கற்றுக்கொள்ள நினைத்தேன். எனக்காக அந்த அசோக் விட்டுச்சென்ற இரண்டு விஷயங்கள், ஒன்று அவனது சொந்தங்களும் நட்பும், மற்றொன்று அவனது 'டைரி'.


ஆனால் எனக்கு அதிலிருந்து எந்த விவரமும் கிடைக்கவில்லை. அந்த டைரியின் மூலம் எனக்கு தெரியவந்தது இரண்டு பெயர்கள் மட்டுமே. அதில் ஒன்று 'அசோக்'. மற்றொன்று 'சிந்து'. அசோக் சிந்து என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்திருக்கின்றான். ஆனால் அது அவளுக்கு தெரியாது. அவன் இறந்த தினமான மார்ச் 14 தான் அந்த சிந்துவின் பிறந்தநாள். அன்று அவளிடம் தன் காதலை சொல்ல எண்ணி பிறந்தநாள் பரிசு வாங்கி அவளை பார்க்க சென்றிருக்கிறான். இது கடைசியாக அவனது டைரியில் பதிவான சொற்கள். அந்த சிந்துவின் புகைப்படம் கூட எனக்கு கிடைக்கவில்லை. ஆனால் அவனது டைரியின் மூலம் அவனது சில வழக்கங்கள் தெரியவந்தது.


'பரவாயில்லை கிருஷ்ணா. இங்க இருக்கவங்கள பொருத்தவரை அசோக் சாகல. நீ தான் அசோக். நீ ஆசைப்பட்ட வாழ்க்கை கெடச்சுருக்கு.  இதனை சொந்தமும் உன்னோடது. அந்த அசோக்குக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு சந்தோசமா இருடா.....' என்று என் மனம் கூறியது. அதுவே சரி என்று எனக்கும் தோன்றியது. 'நான் தான் அசோக்' என்று என்னுள் கூறிக்கொண்டு அசோக்காக மாற ஆரம்பித்தேன். காயங்கள் ஆறுவதற்குள் அவனது கையெழுத்து, மற்றும் எனக்குத்தெரிந்த அவனது பழக்கவழக்கங்களை கற்றுக்கொண்டேன். இரவு தூங்கும்பொழுது கூட 'நான் தான் அசோக்..... நான் தான் அசோக்.....' என்று எனக்குள்ளேயே கூறிக்கொண்டிருந்தேன்.


அன்று 4-4-2011 காலை 7:00 மணி,


அசோக்காக அவனது கல்லூரிக்கு கிளம்பினேன். அப்பா என்னை பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டார். அது எனக்கு கொஞ்சம் வசதியாக இருந்தது. பஸ் ஸ்டாப்பில் இருந்த மாணவர்கள் என்னைப்பார்த்ததும் "எப்டி இருக்கீங்க அண்ணா????? இப்போ பரவால்லையா?????", என்று விசாரித்தனர். இத்தனை அன்பை அனுபவித்திராத நான் மகிழ்ச்சியில் பறந்தேன். இருந்தாலும் ஒரு பயம் எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. அவர்களிடம் பேசிக்கொண்டே பேருந்தில் ஏறினேன்.


முதல் நாள் கல்லூரி. கல்லூரிக்கு செல்வது எனக்கு புதிதல்ல. ஆனால் வேறு ஒரு ஆளாக கல்லூரிக்கு செல்வது இதுவே முதல் முறை. நான் எந்த வகுப்பு என்று கூட தெரியாது. அதற்கும் கடவுள் எனக்கு உதவினார். ஒரு வழியாக என் வகுப்புக்கு சென்றேன். என்ன இருந்தாலும் என் கண்கள் சிந்துவையே தேடிக்கொண்டிருந்தன.

அப்போது ஒரு ஜோடி கூரிய கண்கள் என்னை நோட்டமிடுவதை உணர்ந்தேன். அந்தக் கண்ணின் எஜமானி உறுதியாக அவளே தான். அவள் தான் சிந்து என்று யூகித்தேன். நான் யூகித்தது சரி தான். அவள் தான் சிந்து. ஆனால் எனக்கு அவளது முகம் சரியாக தெரியவில்லை. அந்த டைரியில் இருந்த வர்ணனை அவளை பற்றி கூறியிருந்தது. ஆனால் அவள் கண்கள் அந்த வர்ணனைகள் எல்லாம் குறைவே என்று கூறின.

அங்கும் இங்கும் அலை மோதிக்கொண்டிருந்த கருவண்டு போன்ற கண்கள். புருவத்திற்கு மத்தியில் செந்தூரம். அந்த செந்தூரத்தை தோற்கடிக்கும் விதமாக சிவந்திருந்த இதழ்கள். நான் அவளை கவனிப்பதை உணர்ந்து சிவந்து போன கண்ணங்கள். உலகில் உள்ள மற்ற அனைத்தும் செயற்கை என்றும் அவளது அழகு மட்டுமே இயற்கை என்றும் எண்ணத் தோன்றியது. அவளைப் பார்த்த ஓரிரு நிமிடத்திலேயே என் கண்கள் அவளுக்கு அடிமையாகிவிட்டதே அந்த அசோக் இவளை காதலித்ததிலும் ஏங்கியதிலும் எந்த அதிசயமும் இல்லை.

அன்று அனைவரும் என்னிடம் நலம் விசாரித்தனர். அவளைத் தவிர. எப்படியும் என் காதலை அவளிடம் சொல்லி விட வேண்டும் என்று நினைத்தேன். ஒரு நிமிடம், நான் 'என் காதல்' என்றா கூறினேன்????? ஆம் அப்படியும் வைத்துக் கொள்ளலாம். நான் அவளை காதலிக்கத் தொடங்கினேன். இப்படி ஒருத்தியை பார்த்தவுடன் காதல் கொள்ளாவிட்டால் அது தகுமோ????? அந்த அசோக் செய்த தவறு அவளிடம் தன் காதலை சொல்லாமல் போனது தான். அது எனக்கு நன்மை தான். அவளிடம் தனிமையில் பேச ஆசையுற்றேன். ஆனால் அவள் என்னை பார்த்தாலே முகம் சிவந்தாள்.

அன்று சரியான மழை. நான் மழைக்கு ஒதுங்கி ஒரு ஓரமாக நின்றிருந்தேன். அவளும் அதே என்னுடன் என் பேருந்தில் வருபவள் ஆதலால் அவளும் என்னுடன் நின்றிருந்தாள். நான் அவளிடம் பேசுவதற்கு இதுவே சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தேன். அவளை நெருங்கினேன். "ஹாய்", என்றேன். அவள் என்னை பார்த்து அவளது செந்தூர இதழ் புன்னகையுடன் "ஹாய்", என்றாள். "நீ இந்த ஏரியா தானா?????", என்றேன். "என்ன தெரியாத மாதிரி கேக்குற?????", என்றாள். நான் சிரித்து விட்டு அவளிடம் "ம்ம்..... என்ன தெரியும்ல?????", என்று கேட்டேன். "ம்ம்..... தெரியும் அசோக்", என்றாள்.


அவள் 'அசோக்' என்று சொன்னவுடன் தான் எனக்கு நினைவிற்கு வந்தது. 'நான் அசோக் வேடத்தில் இருக்கும் கிருஷ்ணா' என்று. அவளை விட்டு விலகிச்சென்றேன். மழை விடுவது போல் இருந்தது. அவளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தேன். அவள் என்ன நினைத்திருப்பாள் என்று எனக்குத்தெரியாது. ஆனால் அவளிடம் அசோக்காக நடிப்பதில் எனக்கு மனம் வரவில்லை. அவளிடம் மட்டும் நான் 'கிருஷ்ணா'வாக இருக்கவேண்டும் என்று என் மனம் நினைத்தது.


அவளிடம் நான் அசோக் இல்லை..... கிருஷ்ணா என்று உண்மையை சொல்லலாமா வேண்டாமா என்று குழம்பிக்கொண்டே அன்றைய இரவு சென்றது. ஒரு வழியாக அவளிடம் உண்மையை சொல்வது என்று முடிவுக்கு வந்தேன். மறுநாள் அவளை கல்லூரியில் சந்தித்தேன். "ஹாய் சிந்து", என்றேன். அவள் "ஹாய் அசோக்", என்றாள். "உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்", என்றேன். அவள் குழம்பியவளாய் "ஓகே", என்றாள். "இப்போ இல்ல ஈவினிங் பாக்கலாம்.", என்று சொல்லி கிளம்பினேன்.


அன்று மாலை 6:00 மணி. மஞ்சள் பூசிய மங்கையின் முகம் போல வானை மஞ்சள் வெயில் அலங்கரித்திருந்தது. குங்குமப்போட்டென சூரியன் சிவந்து வானில் மேற்கில் மறைய தயாராக இருந்தது. சில்லென்ற காற்று சில சாரல் துளிகளை பன்னீர் தெளிப்பது போல என் மீது தெளித்தது. சூரிய கிரணங்கள் சூழ தேவதை மண்ணில் நடந்து வருவது போல வெள்ளை சுடிதார் அணிந்து என்னை நோக்கி நடந்து வந்தாள்.


"சொல்லு அசோக் ஏதோ தனியா பேசணும்னு சொன்னியே", என்றாள். "ப்ளீஸ் சிந்து என்ன அந்த பேர் சொல்லி கூப்டாத.", என்று அருவருத்தேன். "என்ன ஆச்சு அசோக். அதானே உன் பேரு. உன்ன வேற எப்டி கூப்ட முடியும்", என்றாள். "நான் உன்ட ஒரு உண்மையா சொல்லணும். அதுக்கு தான் உன்ன வர சொன்னேன்", என்றேன். "என்ன உண்மை அசோக்", என்று குழப்பத்துடன் கேட்டாள்.


"இந்த உண்மைய நீ யார்கிட்டயும் சொல்ல கூடாது." என்று புதிரிட்டேன். "சொல்லு அசோக்", என்றாள். "நான் அசோக் இல்ல. என் பேரு கிருஷ்ணா. நீங்க பெங்களூர் வந்தப்போ அசோக் செத்துட்டான். என்ன அசோக்ன்னு நெனச்சு இங்க கூட்டிட்டு வந்துட்டாங்க.", என்றேன். அவள் எந்த சலனமும் இல்லாமல், "அப்பறம்", என்றாள். அவள் கேட்ட தொனியில் இருந்தே அவள் நான் சொன்னதை நம்பவில்லை என்று புரிந்தது.


நான் அவளை என் வீட்டிற்கு அழைத்துச்சென்றேன். என் அறைக்குள் சென்று அந்த செய்தித்தாளை அவளிடம் நீட்டினேன். "இதோ பார். இதுல போட்ருக்கே இது தான் அசோக். நான் கிருஷ்ணா. நீ யாரு அந்த அசோக் யாருன்னு கூட எனக்கு தெரியாது. இந்த டைரியை பார்த்து தான் எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டேன்", என்று கூறி அந்த டைரியை காட்டினேன். அவள் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. ஒருவழியாக அவளை நம்பவைத்தேன்.


"சரி. இதெல்லாம் உடனே நீ அசோக்கோடா அப்பா அம்மா கிட்ட சொல்லு", என்று என்னை இழுத்தாள். "சாரி சிந்து." என்றேன். அவள் குழப்பத்துடன் "இதுக்கு என்ன அர்த்தம்?????", என்றாள். "நான் உண்மையா சொல்ல தயாரா இல்லன்னு அர்த்தம்", என்று பிடிவாதக்குரலில் கூறினேன். "இது தப்பு. அவங்கள நீ ஏமாத்திற்றுக்க. நான் போய் சொல்லப்போறேன்.", என்று கூறி நடந்தாள். "போய் சொல்லு. ஆனா நா சொல்றத முழுசா கேட்டுட்டு போய் சொல்லு." என்று நிறுத்தினேன். "இன்னும் என்ன சொல்லப்போற ????? இவ்ளோநாள் இந்த குடும்பத்த ஏமாத்துனது பத்தாதா????? இன்னும் எமாத்தனுமா?????", என்றாள். நான் அவளை கதவருகே அழைத்துச்சென்றேன். "அங்க பாரு அப்பா எவ்ளோ நிம்மதியா பேப்பர் படிசுற்றுக்காரு. அம்மா எவ்ளோ சகஜமா தங்கச்சி கூட சண்டபோட்டுற்றுக்காங்க. இபோ நா போய் நான் உங்க பையன் அசோக் இல்ல, அவன் செத்துட்டான்னு சொன்ன இந்த நிம்மதியும் சந்தோசமும் இந்த குடும்பத்துல இருக்குமா????? நான் அனாதையா வாழ்ந்தவன் எனக்கு தெரியும் அந்த கஷ்டம் என்னன்னு. இதுக்குமேலயும் நீ உண்மையா சொல்லனும்னு நெனச்ச போய் சொல்லு. போ.", என்று கூறி முடித்தேன்.


அவள் மனம் மாறியிருக்கவேண்டும். "சரி. அது இருக்கட்டும். இந்த உண்மையை நீ ஏன் என்கிட்ட சொன்ன????? என்கிட்டயும் சொல்லாமலேயே இருந்துருக்கலாமே", என்று கேட்டாள். "அது...... அது வந்து..... நா....." என்று இழுத்தேன். "சொல்லு கிருஷ்ணா", என்று வினவினாள். "நான் உன்கிட்ட பொய்யானவனா இருக்க விரும்பல. ஏன்னா நான் உன்ன காதலிக்கிறேன்.", என்று கூறி முடித்தேன். அவள் அதிர்ச்சி அடைந்தவளாய் என்னை பார்த்தாள். "என்ன பாக்குற????? இதுக்கு முன்னாடி எனக்கு யாரும் இல்ல. இபோ எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, நண்பர்கள் இருக்காங்க. நீயும் இருக்கன்னு நம்புறேன்", என்றேன். "கிருஷ்ணா நாம இந்த குடும்பத்துக்காக அசோக்குக்காக செய்யவேண்டியது ஒன்னு இருக்கு. அதையும் செஞ்சா தான் நீ ஆரம்பிச்ச இந்த விளையாட்டு முடியும்", என்றாள். "அது என்ன?????", என்று கேட்டேன். "அசோக் சாவுக்கு என்ன காரணம்ன்னு நாம கண்டுபிடிக்கணும். அதாவது உண்மையான காரணத்தை", என்றாள்.


"அதுக்கு உன்னோட உதவி எனக்கு வேணும் சிந்து", என்றேன். "அதான் ஆரம்பத்துலையே நாமன்னு சொல்லிட்டேனே. நா என்ன செய்யணும்ன்னு மட்டும் சொல்லு", என்றாள். அவளது வார்த்தை எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. "எனக்கு அந்த அசோக் பத்தி எல்லாமே தெரியனும். அவனோட சின்ன சின்ன பழக்கம், அசைவு கூட எனக்கு தெரிஞ்சுருக்கனும், அப்பறம் நே எப்பயும்போல என்ன அசோக்ன்னு கூப்டலாம் அப்போ தான் யாருக்கும் சந்தேகம் வராது." என்றேன். அவள் சிரித்துக்கொண்டே "ம்ம் சரி அசோக்", என்று கூறி சென்றாள்.


அன்றிலிருந்து சிந்து என்னுடன் மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்தாள். அது காதலா அல்லது அசோக்கின் குடும்பத்தின் மீது ஏற்பட்ட அனுதாபமா என்று எனக்கு தெரியாது. அதை ஆராயவும் எனக்கு நேரமில்லை. 'கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே' என்ற பழமொழி போல நான் அவளை காதல் செய்துகொண்டு தான் இருந்தேன் அவளது பதிலை எதிர்பாராமல்..... 


அன்று முதல் நான் முழுமையாக அசோக்காக மாற முயற்சித்தேன். அன்று மாலை சிந்து என் வீட்டிற்கு வந்தாள். "வாங்க மேடம். என்ன இந்த பக்கம்?????", என்றேன். "ஏன் வரக்கூடாதா சார்?????", என்றாள். "வரலாம். ஆனா மேடம் விஷயம் இல்லாம வரமாட்டிங்களே. அதான் கேட்டேன்", என்றேன். "இப்போ நான் சொல்றது உனக்கு மட்டும் இல்ல அசோக்கோடா நெருக்கமானவங்களுக்கு கூட தெரிஞ்சுருக்க வாய்ப்பு இல்ல", என்றாள்.


"அப்டி என்ன ரகசியமான விஷயம் சொல்லப்போறிங்க மேடம். சொல்லுங்க", என்றேன். "விளையாடாம நா சொல்றத கவனமா கேளு. ஒரு வேலை அசோக்கோடா இறப்புக்கு இதுல இருந்து எதாச்சும் ஒரு க்ளு கிடைக்கலாம்", என்றாள். "சரி என்னன்னு சொல்லு", என்றேன். "அசோக் இன்ஜினியரிங் படிச்சான். ஆனா அவனோட ஆர்வம் எல்லாமே வேற பக்கமா இருந்துச்சு. இதோ பாரு அவனோட சில தீசிஸ் பேப்பர் எனக்கு கெடச்சுது. இத என்னன்னு புரியுதா?????", என்று சில பேப்பர்களை என்னிடம் நீட்டினாள்.


நான் அதை வாசித்துப்பார்த்தேன். அதிர்ந்தேன். "இது எப்டி சாத்தியம்????? இது உலகத்துல எந்த ஒரு விஞ்ஞானியும் முயற்சி செய்யக்கூடாதுன்னு தடை செய்யப்பட்ட ஒரு முறை. இதுக்கு சரியான விளக்கமும் செய்முறையும் யாராலயும் குடுக்க முடியாது, இத முயற்சி செஞ்சா அதனால பல விபரீதங்கள் நடக்க வாய்ப்பு இருக்குன்னு தான் இத தடை செஞ்சாங்க. இத அசோக் முயற்சி பண்ணான்னு சொல்ல வரியா?????", என்று அதிர்ச்சியுடன் கேட்டேன்.


"அவன் இத பிராக்டிகலா செஞ்சுருக்கானான்னு உறுதியா சொல்ல முடியாது. ஆனா இத எல்லாம் வச்சு பாக்குறப்போ அவன் இத செய்யணும்னு முயற்சி பண்ணிருக்கான்", என்றாள். "இதுல இருந்து எந்த ஒரு க்ளூவும் கிடைக்கலையே", என்றேன். "இதுல நம்ம கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்னு இருக்கு கிருஷ்ணா. அசோக் எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணி பண்றவன். அதனால இந்த விஷயத்த பத்தி ஒரு பிளான் பண்ணிருப்பான். அது இங்க தான் எங்கயோ இருக்கு. அதா நீ தான் கண்டுபிடிக்கணும்", என்றாள்.


"இல்ல சிந்து. இங்க இருக்க எல்லாத்தையும் நான் பாத்துட்டேன். இத பத்தி எந்த ஒரு தடயமும் இங்க இல்ல", என்றேன். "நல்ல யோசிச்சு பாரு கிருஷ்ணா. எதாச்சு ஒரு குறிப்பு அவன் வச்சுருப்பான். நல்லா யோசிச்சுப்பாரு", என்றாள். நான் யோசித்தேன். எனக்கு எதுவும் ஞாபகம் வரவில்லை. "நல்லா யோசிச்சு பாரு கிருஷ்ணா", என்று கூறி சென்றாள்.


இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. அந்த தீசிஸ் பேப்பரில் இருந்தவை என் கண் முன் வந்து சென்றன. திடீரென ஏதோ ஒன்று ஞாபகத்திற்கு வர எழுந்தேன். சிந்துவிற்கு போன் செய்தேன். "என்னடா இந்த நேரத்துல?????", என்றாள். அப்போது தான் மணியை கவனித்தேன். மணி அப்போது இரவு 1:45. "சிந்து நான் கண்டுபிடிச்சுட்டேன்", என்றேன். "அப்டியா????? நான் காலைல வரேன்", என்று கூறி தன் தூக்கத்தை தொடர்ந்தாள். எனக்கு அதற்கு மேல் தூக்கம் வரவில்லை. இரவு முழுவதும் அலசி ஆராய்ந்தேன்.


அன்று காலை 9:30 மணி. கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஆனால் தூக்கம் என் கண்களை திறக்க விடவில்லை. வந்தது சிந்து என்று எனக்கு தெரியும். என்னை எழுப்பினாள். கண்களை திறக்காமலேயே தலையருகே இருந்த டைரியை அவளிடம் எடுத்து நீட்டினேன். அவள் "சூப்பர் கிருஷ்ணா. நீ கண்டுபிடிச்சுட்ட", என்று கூறி என் நெற்றியில் முத்தமிட்டாள். கண்கள் தானாக திறந்தது. புன்னகைத்தேன். அவளும் அப்போது தான் உணர்ந்தாள். குறும்பாக புன்னகைத்தாள்.


"இன்னும் நிறைய கண்டுபிடிச்சேன். இத பாரு", என்று கூறி அந்த டைரியில் ஒரு பக்கத்தை காட்டினேன். "இது என்னடா?????", என்று வினவினாள். "இத நல்லா கவனி. இதுல இருக்க பேஜ் நம்பர் அந்த தீசிஸ் பேப்பரோட நம்பர். ஒவ்வொரு நம்பர்க்கும் ஒவ்வொருத்தர மீட் பண்ணனும்ன்னு போட்ருக்கு. அதாவது, ஒவ்வொரு பேப்பர்ல இருக்க பிரக்டிகல் விஷயத்துக்கும் ஒவ்வொருத்தரோட உதவிய அவன் தேடீருக்கான். இத அவன் ஒரு பிரக்டிகல் பேப்பரோட உதவியால தான் பண்ணிருக்கான்", என்று முடித்தேன்.


"ம்ம்..... இதுல இருக்க ஒவ்வொருத்தரையும் நாம விசாரிக்கணும்", என்றாள். "இல்ல சிந்து. அது தேவையே இல்ல.", என்றேன். "வேற என்ன பண்ணனும்?????", என்று கேட்டாள் குழப்பத்துடன். "இந்த ஒரு இடத்துல விசாரிச்சா போதும்", என்று கூறி ஒரு விலாசத்தை காட்டினேன். அவள் அதிர்ந்தாள். "இந்த மொத்த கதையும் ஆரம்பிச்சது இந்த இடத்துல தான். இங்க ஏதோ ஒரு விஷயம் நடந்துருக்கு. அத மட்டும் தெரிஞ்சுக்கிட்டா போதும். மத்த எல்லாம் நமக்கு தெரிஞ்சுடும்", என்றேன்.

கண்டிப்பாக அவளுக்கு அதிர்ச்சி இருக்கத்தான் செய்யும். எனக்கும் அந்த விலாசத்தை பார்த்தவுடன் அவளைக் காட்டிலும் 100 மடங்கு அதிர்ச்சியாக இருந்தது என்பது எனக்கு மட்டுமே தெரியும். அனேகமாக இரவு தூக்கமின்மைக்கு இதுவே காரணமாய் கூட இருக்கலாம். அந்த விலாசம்: மெட்ரோ ஹோம்,
                     142/53, சர்வோ அவென்யு,
                     பெங்களூர்.

அது தான் நான் வளர்ந்த இல்லம். அதாவது, கிருஷ்ணா வளர்ந்த இல்லம். இது அவனது டைரியில் இருந்து எனக்கு கிடைத்தது. "இது நீ வளர்ந்த ஹோம் தானே????? இந்த அட்ரஸ் உனக்கு எங்க கெடச்சுது?????" என்று கேட்டாள். "இது அவனோட டைரில இருந்து தான் கெடச்சுது. எனக்கு என்னமோ தோணுது", என்றேன். "என்ன தோணுது?????", என்று குழம்பியபடி கேட்டாள். "எனக்கும், அசோக்கோடா மரணத்துக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கு. அவன் என்ன பாத்தப்போ என்னோட முகத்த தொட்டு ஏதோ சொல்ல வந்தான். ஆனா அதுக்குள்ள என்னென்னமோ நடந்துடுச்சு. அது மட்டும் இல்லாம இங்க பாரு இதுல இன்னொரு விஷயம் இருக்கு", என்று கூறி அந்த டைரியின் ஒரு பக்கத்தை அவளுக்கு காட்டினேன். அதில் 'கிருஷ்ணா' என்று எனது பெயரும் குறிப்பிட்டிருந்தது. அந்த டைரியின் கடைசி வரியும் அது தான். "நான் பார்த்த வர அசோக்குக்கு கிருஷ்ணான்னு யாரையும் தெரியாது. இதுல அந்த பேர் இருக்குன்னா..... நானும் இதுல சம்பந்தப்பட்றுக்கேன். இப்போ நாம விசாரிக்க வேண்டிய முதல் இடம் நான் வளர்ந்த அந்த ஹோம். அதாவது கிருஷ்ணா வளர்ந்த ஹோம்.", என்று கூறி முடித்தேன்.


நானும் சிந்துவும் மறுநாளே பெங்களூர் செல்ல திட்டமிட்டோம். அந்த பயணம் எனக்கு இன்னும் பெரிய அதிர்ச்சியை தரும் என்று நான் அறிந்திருக்கவில்லை. நான் அசோக்கின் டைரி, அவனது மற்ற பொருட்களை எடுத்துக்கொண்டேன். அன்று நானும் சிந்துவும் பேருந்தில் கிளம்பினோம். எனக்கு ஏதோ ஒன்று உறுத்திக்கொண்டே இருந்தது. "என்னடா என்ன யோசனை?????", என்று கேட்டாள் சிந்து. "இல்ல சிந்து. நல்லா கவனிச்சு பாரு. கிருஷ்ணா மர்மமான முறைல செத்துட்டான்னு அந்த பேப்பர்ல செய்தி வந்துருந்துச்சு. ஆனா அத யாரும் அதுக்கு மேல விசாரிக்கல. அது ஏன்????? அப்ப அங்க ஏதோ ஒரு விஷயம் இடிக்கல?????", என்றேன். "ஆமாடா..... ஏதோ ஒரு பெரிய தப்பு நடந்துருக்கு.", என்றாள். எனக்கும் அதுவே தோன்றியது. இதற்குப்பின் யாரோ ஒருவரின் புத்திசாலித்தனம் இருக்கிறது என்று தோன்றியது.


அன்று 4-7-2011, காலை 8:30 மணி. நானும் சிந்துவும் பெங்களூரில் இறங்கினோம். இருவரும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு நேரே அந்த ஹோமிற்கு சென்றோம். என்னைப் பார்த்ததும் அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி. ஆனால் நான் 'கிருஷ்ணா' என்று காட்டிக்கொள்ளாமல் 'அசோக்'காக நடந்துகொண்டேன். "நான் மதர பாக்கணும்.", என்றேன். என்னை மதரிடம் அழைத்துச்சென்றனர். மற்றவரிடம் இருந்த அதிர்ச்சி மதரிடம் இல்லை. அதை என்னால் உணர முடிந்தது. "என்ன அசோக். திடீர்ன்னு வந்துருக்க?????", என்றார்.


அப்படியானால் மதருக்கு அசோக்கை தெரிந்திருக்கிறது. என்னுடைய வேலை இன்னும் சுலபமாகிவிட்டது என்று எண்ணி மகிழ்ந்தேன். எழுந்து சென்று கதவை மூடிவிட்டு வந்தேன். "மதர், நான் அசோக் இல்ல. கிருஷ்ணா.", என்றேன். மதர் ஒருநிமிடம் அதிர்ந்துவிட்டார். "அப்போ இறந்தது?????", என்றார்." இறந்தது அசோக்", என்றேன். மதருக்கு 'குப்' என்று வியர்க்க ஆரம்பித்தது. "சொல்லுங்க மதர். நான் யாரு????? எனக்கும் அசோக்குக்கும் என்ன சம்பந்தம்????? நான் ஏன் அவன மாதிரி இருக்கேன்?????", என்று எனது கேள்விகளை அடுக்கடுக்காக தொடுத்தேன்.


மதர் தயங்கியது தெரிந்தது. "மதர் நீங்க சொல்ற உண்மைல தான் அசோக்கோடா சாவுக்கு பின்னாடி இருக்க மர்மம் தெளிவாகும். சொல்லுங்க ப்ளீஸ்", என்றேன். "என்னை மன்னிச்சுடு கிருஷ்ணா. நான் சொல்றத அதிர்ச்சியாகாம கேளு.", என்று தொடங்கினார் மதர். 'என்ன அதிர்ச்சி இருக்கப்போகிறது' என்று நினைத்த எனக்கு அந்த உண்மை பெரிய இடியாய் இருந்தது.


"உன்ன இங்க கொண்டுவந்து சேர்த்தது வேற யாரும் இல்ல. அசோக் தான்", என்றார். "என்ன சொல்றீங்க மதர். எனக்கு எதுவும் புரியல", என்றேன். "உன்ன இந்த ஹோம்ல 2 வருஷத்துக்கு முன்னாடி தான் சேர்த்தாங்க. இப்போ உன்னோட வயசு 3 தான்", என்றார். எனக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. "அப்போ நான்.....", என்று இழுத்தேன். "ஆமா கிருஷ்ணா. நீ ஒரு க்ளோன்", என்று முடித்தார்.


நானும் சிந்துவும் அதிர்ந்தோம். 'அந்த அசோக் ஒரு ஜீனியஸ். அவன் அந்த தீசிஸ பிரக்டிகலா செஞ்சுட்டான். அவனோட ஆராய்ச்சியோட ரிசல்ட் நான் தான். அதனால தான் அந்த டைரில கடைசியா என்னோட பேரு இருந்துருக்கு.', என்று எனக்குள் நினைத்தேன். "சரி மதர். அவன் என்னை ஏன் உருவாக்கினான்னு தெரியுமா?????", என்று கேட்டேன். ஆனால் அவரது பதில் என்னை ஏமாற்றமடைய செய்தது. "அது எனக்கு தெரியாது கிருஷ்ணா. ஆனா இவன கவனமா பாத்துக்கோங்க. இவன பத்தி யாருக்கும் தெரியக்கூடாதுன்னு அடிக்கடி சொல்லுவான்.", என்றார்.


அப்படியானால் கிருஷ்ணா ஒரு க்ளோன் என்பதும், அவனை உருவாக்கியது அசோக் என்ற மாணவன் என்றும், அவன் இப்பொழுது உயிரோடு இல்லை என்றும் எங்களைத் தவிர யாருக்கும் தெரியாது என்று புரிந்தது.


"சிந்து வா உடனே நாம போகணும்.", என்று கூறி அவசரமாக அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினேன். "கிருஷ்ணா நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு", என்றார் மதர். "நீங்க ஜாக்கிரதையா இருங்க மதர்", என்று கூறி கிளம்பினேன். நடந்த அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த சிந்து ஏதும் புரியாதவளாய் என்னுடன் கிளம்பினாள். இருவரும் ஊரை வந்தடைந்தோம். ஆனால் ஏதோ புரியாமல் என் மனம் அழைந்துகொண்டிருந்தது.


 "என்ன ஆச்சு கிருஷ்ணா??", என்று ஒரு குரல் கேட்டு நிமிர்ந்தேன். அது சிந்து தான். "என்னன்னு தெரில. ஆனா ஏதோ ஒன்னு உறுத்துது. எங்கயோ நாம ஒரு தப்பு பண்ணிருக்கோம். எதையோ ஒன்ன நாம சரியாய் கவனிக்காம விட்டுருக்கோம்னு தோணுது சிந்து", என்றேன். "நே என்ன சொல்ல வர?? ஒன்னும் புரியல எனக்கு", என்றாள். "இப்போ ஒன்னு சொல்றேன் நல்லா கேளு. 'கிருஷ்ணா'ன்ற க்ளோன உருவாக்குன அசோக் அத ஏன் பாதுகாப்பா வேற இடத்துல வளர்க்கணும்????? யாருகிட்ட இருந்து அவன் 'கிருஷ்ணாவ' பாதுகாக்க நெனச்சான்????? இப்போ அந்த 'ஒருத்தர்' தான் அசோக்கோடா சாவுக்கு காரணமா இருந்துருந்தா, அவனுக்கும் நமக்கு தெரிஞ்ச உண்மை எல்லாம் தெரிஞ்சுருக்கும் அப்டி தானே?????", என்றேன்.


சற்று தெளிந்தவளாய், "கண்டிப்பா தெரிஞ்சுருக்கும். ஆனா அந்த ஒருத்தார் யாரு?????", என்று பதில் வினா எழுப்பினாள். "அவன தான் நாம கண்டுபிடிக்கணும்", என்றேன். "எப்டி கண்டுபிடிக்க போறோம்?????", என்றாள் புரியாதவளாய். "அதுக்கு ஏங்கிட்ட ஒரு யோசனை இருக்கு", என்று கூறி எழுந்தேன். "என்ன யோசனை?????", என்றாள். என் யோசனையை அவளுக்கு விளக்கினேன். "இந்த யோசனை சரியாய் வருமா?????" என்று கேட்டாள் சந்தேகத்துடன். "முயற்சி செஞ்சு பாப்போம்.", என்று முடித்து நடந்தேன். அவளும் என்னுடன் நடந்தாள்.


வீட்டிற்கு சென்றேன். ஏதோ ஒன்று என் நினைவிற்கு வர, எழுந்து அலமாரியை திறந்து தேட ஆரம்பித்தேன். ஒரு துண்டு சீட்டு என் கையில் தட்டுப்பட்டது. ஆம்..... நான் தேடியது அந்த சீட்டை தான். அதை நான் முன்பே பார்த்திருக்கிறேன். அது தேவைப்படாது என்று எண்ணி விட்டிருந்தேன். ஆனால் அது ஒரு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எனக்கு அதுநாள் வரை தெரிந்திருக்கவில்லை.


அப்படி அந்த துண்டு சீட்டில் என்ன தான் இருந்தது?????


அதில் ஒரு எண் எழுதப்பட்டிருந்தது. அந்த எண் "MDCL-5360". அது என்ன எண்????? இதில் ஏதாவது ஒரு குறிப்பு இருக்குமா????? என்று என்னுள் ஏகப்பட்ட கேள்விகள் எழுந்தன.


அந்த சீட்டை கையில் வைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருந்தேன். நிச்சயமாக இது ஒரு வண்டியின் எண்ணாக இருக்க முடியாது. வேற என்னவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். "என்ன புக்குடா அது????? ஏற்கனவே படிச்சுருப்பியே?????", என்று அம்மாவின் குரல் என்னை எழுப்பியது. "என்னம்மா?????", என்று கேட்டேன். "லைப்ரேரி புக் நம்பர் தானே இது?????", என்று தயக்கத்துடன் கேட்டார் அம்மா. இது ஏன் ஒரு புத்தகத்தின் எண்ணாக இருக்கக்கூடாது என்று எனக்கு தோன்றியது. "ஆமாம்மா.....", என்று கூறி உற்சாகத்தில் நூலகத்தை நோக்கி சென்றேன். அசோக் ஏற்கனவே நூலகத்தில் உறுப்பினர் என்பதால் உறுப்பினர் அட்டையையும் எடுத்துச்சென்றேன்.


புத்தகங்களின் குடியிருப்பு பகுதியை அடைந்தேன். நேராக நூலக பொறுப்பாளரிடம் சென்று அந்த எண்ணை காட்டி, "இந்த புக் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்", என்றேன். அவர், "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பாத்து சொல்றேன்", என்றார். சிறிது நேரத்தில், "சார் இது ஒரு கார்டூன் காமிக் புக். நேரா போய் வலதுபக்கம் திரும்புனா இருக்க முதல் ஷெல்ப்ல இருக்கும் பாருங்க.", என்றார்.


'காமிக் புக்கா????? ஒரு வேலை நம் யூகம் தவறாக இருக்குமோ', என்று குழப்பம் உண்டாயிற்று. எதற்கும் ஒருமுறை இதை ஆராய்ந்து பார்ப்போம் என்று எண்ணி அந்த புத்தகத்தை எடுத்துச்சென்றேன். இருந்தாலும் என்னுள் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருந்தது. அந்த புத்தகத்தை திருப்பி பார்த்தேன் ஆனால் அதில் எந்த தடயமும் கிடைக்கவில்லை. புத்தகத்தை அருகில் வைத்துவிட்டு, 'நம் யூகம் தவறு தான். அவன் எங்கே கார்டூன் காமிக் படிக்கப்போகிறான். அவனுக்கு எங்கே இதற்கெல்லாம் நேரம் இருக்கப்போகிறது. எதாவது அறிவியல் புத்தகம் என்றால் நம்பிக்கையுடன் தேடலாம். இது கார்ட்டூன் புத்தகம் தானே.' என்று என்னை நானே திட்டிக்கொண்டிருந்தேன்.


"என்னடா மறுபடியும் இந்த கார்டூன் காமிக்ஸ் படிக்க ஆரம்பிச்சுட்டியா?????", என்று அப்பா கேட்டார். "என்னப்பா?????", என்று விளித்து எழுந்தவனாய் கேட்டேன். "கொஞ்ச நாளா இந்த கார்டூன் புக்ஸ் படிக்காம இருந்த. இப்ப திரும்பவும் பைத்தியம் பிடிச்சுடுச்சா?????", என்று கேட்டார். அப்போது தான் எனக்கு புரிந்தது 'அசோக் ஒரு கார்டூன் பைத்தியம்' என்று. அப்படியானால் கண்டிப்பாக இந்த புத்தகத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று முடிவு செய்து அதை படிக்க ஆரம்பித்தேன்.


அந்த காமிக் புத்தகத்தை பற்றி சொல்லவேண்டுமானால், அது ஒரு 53 பக்க வண்ண படங்களுடன் கூடிய புத்தகம். அது ஒரு பூனையின் கதை. அந்த பூனை ஆராய்ச்சியில் எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை பற்றிய கதை அது. ஆனால் எனக்கு அதில் இருந்து எந்த தடயமும் கிடைக்கவில்லை. கண்ணை மூடி படுத்தேன்.


அப்போது அந்த புத்தகத்தின் படங்கள் என் கண் முன் வந்து கொண்டிருந்தன. 'என்ன அது????? அந்த 28வது பக்கத்தில்.....'. வேகமாக எழுந்து அந்த புத்தகத்தின் 28வது பக்கத்தை புரட்டி பார்த்தேன். அதில் ஒரு நிகழ்வு. அந்த பூனை தனக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்யும் காட்சி. அதில் ஏதோ ஒரு வித்தியாசம் இருந்தது.


என்ன அது?????


ஆம், அந்த காட்சியில் அந்த பூனை குறிப்பிட்டிருந்த விலாசம் மட்டும் வித்தியாசமாக தெரிந்தது. அதாவது, அந்த புத்தகத்தில் இருந்த மற்ற எழுத்துக்களும் இந்த விலாசமும் வேறாக இருந்தன. இந்த கையெழுத்துக்கு சொந்தக்காரன் அசோக்காக தான் இருக்க வேண்டும். அப்படியானால் அந்த விலாசத்தில் 'ஏதோ ஒன்று' இருக்கிறது. அந்த 'ஏதோ ஒன்று' ஏன் அசோக்கின் ஆராய்ச்சிகூடமாக இருக்கக்கூடாது????? அந்த விலாசத்தை எழுதி என்னுடன் எடுத்துக்கொண்டேன்.


வெற்றிக்களிப்புடன் எழுந்த எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.


சிந்து என் அறைக்குள் வந்து என்னை அழைத்தாள். அவளது முகத்தில் ஒரு பதற்றம் தெரிந்தது. "என்ன ஆச்சு????? ஏன் பதட்டமா இருக்க?????", என்று கேட்டேன். "மதர் இறந்துட்டாங்க. ஆக்ஸிடென்ட்ல.", என்று கூறி மாலை நாளிதழை காட்டினாள். எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. அந்த செய்தியுடன் மதர் இறப்பிற்கு காரணமான காரின் படம் போடப்பட்டிருந்தது.


என் கண்கள் விரிந்தன. "இது அவங்க தான். அவங்க நம்ம கிட்ட வந்துட்டாங்க", என்றேன். "யாரு?????", என்று வினவினாள். "அசோக் சாவுக்கு காரணமா இருந்த அந்த 'ஒருத்தன்' தான்.", என்றேன். "எப்டி இவ்ளோ அடிச்சு சொல்ற?????", என்று கேட்டாள். "இந்த கார் தான் அசோக்க இடிச்சுட்டு போனது. இதே கார் தான் அவன தூக்கீட்டு போனது. எனக்கு இந்த கார் நம்பர் நல்லா ஞாபகம் இருக்கு.", என்றேன். "அப்போ அவங்களுக்கு உண்மை எல்லாம் தெரிஞ்சுருக்குமா?????", என்றாள். "தெரியல. ஆனா இப்போ நாம நம்ம வேகத்த இன்னும் அதிகரிக்கணும்.", என்றேன். "நம்ம கிட்ட தான் இப்போ எந்த வழியுமே இல்லையே. கொஞ்சம் தெரிஞ்ச மதர் கூட இப்போ உயிரோட இல்ல. என்ன பண்ண போறோம்?????", என்று கேட்டாள்.


"இப்போ வேற ஒரு வழி தெரிஞ்சுருக்கு. அந்த வழில போவோம்", என்று கூறி நான் வைத்திருந்த விலாசத்தை அவளிடம் நீட்டினேன். "என்ன இது?????", என்று கேட்டாள். "தெரியல போய் பாத்தா தான் தெரியும்", என்றேன். நடந்தவற்றை விளக்கமாக கூறினேன்.


மறுநாள் காலையில் இருவரும் அந்த இடத்திற்கு கிளம்பினோம். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு அந்த விலாசம் எங்களை கொண்டுபோய் நிறுத்தியது. அங்கே ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடத்தின் வாசலில் ஒரு கதவு இருந்தது. அந்தக்கதவில் பூட்டும் போடப்படவில்லை, சாவி துவாரமும் இல்லை. அதை எவ்வாறு திறப்பது என்று தெரியாமல் திணறிப்போய் நின்றோம். எங்களுக்கு வேறு எந்த துப்பும் கிடைக்கவில்லை.


"இங்க எதாச்சு ஒரு வழி இருக்கணும்.", என்று கூறியவண்ணம் அங்கும் இங்கும் நடந்தேன். அப்போது என் கண்ணில் ஏதோ தெரிந்தது. ஆம்..... அதுவாகத்தான் இருக்கவேண்டும். கதவுக்கு அருகாமையில் தரையில் ஒரு குறியீடு போடப்பட்டிருந்தது. அது வரையப்பட்டது அல்ல. முழுக்க முழுக்க சென்சாரால் உருவாக்கப்பட்டிருந்தது என்பதை எங்களால் உணர முடிந்தது. "கிருஷ்ணா அந்த சென்சார் மேல உன் கால வை", என்றாள் சிந்து.


"என்ன சொல்ற?????" என்று கேட்டேன். "புரியலையா????? இது ஒரு இம்ப்ரசன் டிடெக்டார். இது நம்ம கை ரேகை அல்லது கால் ரேகையை பதிவு செய்றது. அசோக் தன்னோட கால் ரேகைய இதுல பதிவு பண்ணிருப்பான். இதோ இங்க பாரு இதுல கால் பாதத்தோட அச்சு தெரியுது", என்று கூறி அந்த பாத அச்சை காட்டினாள். "அப்போ அவன் கால் வச்சா தானே கதவு தெறக்கும்.", என்றேன். "சரி தான். நீ தான் அசோக். புரியலையா????? அவன் உன்ன அவன மாதிரியே உருவாக்கியிருக்கான். ஒருவேளை உங்க ரெண்டுபேரோட கால் ரேகை ஒரே மாதிரி இருக்கலாம்னு தோணுது. முயற்சி செஞ்சு பாரு", என்றாள்.


நானும் அவள் கூறியதை செய்தேன். ஆனால், அந்தக்கதவு திறக்கவில்லை. அந்தக்கதவின் முன் ஹாலோகிராம் போல ஏதோ ஒன்று தோன்றியது. அதில்: "Impression Matching" என்று தோன்றியது. உடனே சிந்து தன் சுடிதார் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு "எப்புடிடிடி", என்று கேட்டாள். அவள் அறிவை மெச்சுவது போல பாவனை காட்டிவிட்டு இருவரும் திறந்த கதவின் வழியே உள்ளே சென்றோம்.



என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. நான் எதிர்பார்த்தது போல இது அசோக்கின் ஆராய்ச்சிக்கூடம் தான். இதுவரை நான் கண்டிராத புதிய வகை கருவிகள். பலவிதமான இயந்திரங்கள். உள்ளே அனைத்தும் ஹாலோகிராம் முறையில் நிரப்பப்பட்டிருந்தன. ஒரு கம்ப்யூட்டர் இருந்தது. அதில் எதாவது தடயம் கிடைக்கலாம் என்று எண்ணி அதை ஆன் செய்தோம். நாங்கள் எண்ணியது போலவே "PASSWORD REQUIRED" என்று வந்தது. "பாஸ்வேர்ட் என்னவா இருக்கும்?????", என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு நின்றோம்.

எங்களுக்கு அதில் ஒரே ஒரு குறிப்பை அசோக் விட்டு சென்றிருந்தான். "CAN / CLONE" என்பது தான் அந்த குறிப்பு. ஆனால் அதில் பாஸ்வேர்ட் அடிக்க எந்த ஒரு இடமும் இல்லை. 


அது என்னவாக இருக்கும்?????


ஆம் நான் தான் அது. அந்த குறிப்பின் அர்த்தம் "ஒரு கிளோனால் முடியும்" என்றால் நான் தான் அந்த பாஸ்வேர்ட். "சிந்து இங்க எதாச்சு ஒரு சென்சார் இருக்கும். அதாவது கண், குரல், அல்லது இதய துடிப்பு இதுல ஏதாவது ஒன்ன சென்ஸ் பண்ற மாதிரி ஒரு சென்சார். ஆதால தான் இந்த கம்ப்யூட்டர நாம இயக்க முடியும். அத தேடனும்", என்றேன். "இதோ இத பாரு கிருஷ்ணா", என்று ஒன்றை காட்டினாள். அது பார்ப்பதற்கு ஒரு சிறிய கேமரா லென்ஸ் போல இருந்தது. நான் அதன் எதிரே சென்று நின்றதும் அதில் இருந்து சிவப்பு வண்ண லேசர் என் உடலில் பாய்ந்தது.


இது தான் அந்த சென்சார் என்று புரிந்தது. அதன் எதிரில் நின்றேன். உடனே "RETINA NOT MATCHING" என்று அந்த திரையில் வந்தது. என் கண்களை அந்த லேசர் வெளிச்சத்தின் எதிரே வைத்தேன். என் கண்களை பரிசோதித்த அந்த சென்சார், "MATCHING" என்றது. உடனே அந்த கம்ப்யூட்டர் ஆன் ஆனது. அதில் இந்த ஆராய்ச்சியின் தீசிஸ், அதற்கு தேவையான கருவிகளை பற்றிய தகவல்கள், போன்ற பல குறிப்புகள் இருந்தன.


அதில் இருந்த எல்லாவற்றையும் பார்த்தோம். இறுதியில் "CLONE" என்று ஒரு அடைவு (Folder) இருந்தது. அதை திறந்து பார்த்தோம். அதில் சில வீடியோக்கள் இருந்தன. நான் அப்போது தான் அசோக்கை பார்த்தேன். அப்படியே என்னை போல இருந்தான். அந்த வீடியோக்களில் அவன் ஒரு க்ளோனை உருவாக்குவது பதிவாகி இருந்தது. ஆனால் அது இந்த இடம் போல தெரியவில்லை. அதை முழுமையாக பார்த்தோம். நான் பிறப்பதை நானே பார்த்துக்கொண்டிருந்தேன்.


அந்த வீடியோவில் எனக்காக ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது என்று அப்போது எனக்கு தெரியவில்லை. அந்த வீடியோவின் 14:03வது  நிமிடத்தில் எனக்காக அந்த அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.


அந்த வீடியோவின் 14:03வது நிமிடம் வந்தது. க்ளோனை உருவாக்கிய மகிழ்ச்சியில் இருந்த அசோக்கை யாரோ ஒருவன் தலையில் அடிக்கிறான். அடிபட்ட அசோக் மயங்கி விழுகிறான். அந்த ஒருவன் வயிற்றின் இடதுபுறம் ரத்தத்துடன் அந்த க்ளோனை தூக்கிக்கொண்டு எங்கோ செல்கிறான். எதையோ மறந்தவன் போல மறுபடியும் தான் மட்டும் வந்து அசோக் அருகில் நின்று, "என்ன மன்னிச்சுடு. நீ நெனைக்கிறத நான் நடக்க விட மாட்டேன்", என்று கூறி கேமரா இருக்கும் திசை நோக்கி திரும்புகிறான்.


நான் ஒரு நொடி அதிர்ந்துவிட்டேன். என்ன நடக்கிறது இங்கே?????


அவன் ஒவ்வொரு அடி கேமராவை நோக்கி முன் வரும்போதும் என் உடல் நடுங்கியது. அவன் கேமராவை கையில் எடுத்து அதை நிறுத்திவிட்டான். அத்துடன் அந்த வீடியோ முடிந்தது. பின் நடந்தது என்ன என்று தெரியவில்லை.


இதில் யார் உண்மையான அசோக்????? ஆம். வந்தவனும் என்னைப்போலவே இருந்தான். அவன் யாராக இருக்க முடியும்????? ஒருவேளை வந்தவன் அசோக் என்றால், க்ளோனை உருவாக்கியவன் யார்????? அவனுக்கு என்ன நடந்தது????? அவன் ஆசை தான் என்னவாக இருந்தது????? அதை வந்தவன் ஏன் தடுக்கிறான்????? அப்போ செத்தது யாரு?????


எண்ணங்களும் கேள்விகளும் எழ, என் இதயத்துடிப்பு அதிகரித்துக்கொண்டிருக்கையில் ஒரு அடி விழுந்தது என் தலையில். காட்சிகள் மங்க சுருண்டு தரையில் விழுந்தேன். கண் விழித்து பார்க்கையில், கை கால்கள் தூணோடு இணைத்துக் கட்டப்பட்டு நின்றிருந்தேன். கட்சிகள் மங்கலாகவே தெரிந்துகொண்டிருந்தன. யாரோ என் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவது போல் தெரிந்தது. அது சிந்து தான்.


"சிந்து எனக்கு என்ன ஆச்சு????? யாரு என்ன அடிச்சது????? கட்ட அவுத்துவிடு.....", என்று படபடவென அவளிடம் பேசினேன். "சாரி கிருஷ்ணா..... அவ இனி நீ சொன்ன எதையும் செய்ய மாட்டா..... நான் சொல்றத மட்டும் தான் செய்வா.....", என்று ஒரு குரல் கதவருகே இருந்து கேட்டது. நான் குரல் வந்த திசை நோக்கினேன். ஒரு 23-24 வயது மதிக்கத்தக்க மனிதன் முகமூடி அணிந்து என்னருகே வந்தான்.


"சிந்து, இங்க என்ன நடக்குது????? வந்து என் கட்ட.....", என்று கூறி முடிப்பதற்குள் என் வயிற்றில் ஒரு அடி விழுந்தது. "யார் நீ????? இங்க என்ன நடக்குது????? சொல்லு", என்று கத்தினேன் வலியில். "நீ உருவாக காரணமா இருந்த என்னையே யாருன்னு கேக்குறியே கிருஷ்ணா", என்றான் அந்த மனிதன். ஒன்றும் புரியாமல் விழித்தேன். "இன்னும் நான் யாருன்னு தெரியலையா?????", என்று கேட்டவண்ணம் முகமுடியை கழற்றினான். "அ.....அ.....அசோக்?????", என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். "ஆமா..... நான் தான் அசோக்.....", என்றான் அவன். "அப்ப அன்னைக்கி என் முன்னாடி செத்தது யாரு?????", என்றேன். வான் அதிரும் அளவுக்கு சிரித்தான். "சொல்லு..... இந்த வீடியோல இருந்த இன்னொருத்தன் யாரு????? அவன கொலை பண்ணது யாரு????? நீ தான் உண்மையான அசோக்னா என்ன ஏன் உன் இடத்துல இருக்க வச்சுருக்க????? சொல்லு", என்று அடுக்கிக்கொண்டே சென்றேன்.

"சொல்றேன் கிருஷ்ணா..... ஏன் அவசரப்படுற????? உனக்காக நெறைய அதிர்ச்சி வச்சிருக்கேன். பொறுமையா கேளு." என்று கூறி தொடர்ந்தான். "இப்போ இங்க நடக்குற எதுவும் உண்மை இல்ல கிருஷ்ணா..... இதோ இந்த சிந்து கூட.....", என்றான். எனக்கு ஒரு நிமிடம் இடி விழுந்தது போல் ஆனது. 'சிந்து இவ்ளோ நாள் நடிச்சாளா..... ஏன் நடிச்சா?????'. "என்ன கிருஷ்ணா நம்பலையா????? இன்னொன்னு சொல்றேன் கேளு. உன்ன இப்போ அடிச்சு கட்டிப்போட்டது இதோ இந்த சிந்து தான். அவளையே கூட கேட்டுப்பாரு.....", என்றான். நான் கேள்வியுடன் அவளை பார்த்தேன். அவள் எல்லாம் உண்மை என்பது போல தலை குனிந்தாள்.

"நல்லா கேளு கிருஷ்ணா..... இவ்ளோ நாள் நீ கண்டுபிடிச்சது எல்லாம் சரி தான். ஆனா ஒரே ஒரு விஷயம் மட்டும் தப்பு. அதான், உன்ன உருவாக்குனது நான் இல்ல. உன்ன உருவாக்குனது 'MC536'. என்னடா போன் மாடல் மாதிரி சொல்றானேன்னு பாக்குறியா????? அந்த வீடியோல பாத்தியே அவன்தான் அது. அவன் தான் நான் உருவாக்குன முதல் குளோன். என்னோட DNAவ வச்சு தான் அவன நான் உருவாக்குனேன். உன்ன உருவாக்குனது அவன். இத நான் எதிர்பாக்கவே இல்ல. இது மட்டும் இல்ல என்னால நெனச்சு கூட பார்க்க முடியாத பல விஷயத்த அவன் செஞ்சான். அவன் என்னோட எல்லா கனவையும் நனவாக்குனான். ஒன்னே ஒன்ன தவிர.", என்றான் கோவத்துடன். நான் ஏதும் புரியாமல் விழித்தேன்.

"நான் பிறந்தப்பவே ஏகப்பட்ட திறமையோட பிறந்து தொலைச்சுட்டேன். ஆனா அந்த கடவுள் பண்ண தப்பு என்ன தெரியுமா என்ன இங்க படச்சது தான். இதே திறமையோட நான் வேற எங்கயாவது பிறந்துருந்தா என்னோட வாழ்க்கையே வேற மாதிரி இருந்துருக்கும். இங்க எல்லாரும் என்ன பாராட்டுனாங்களே தவிர யாரும் என்ன மதிக்கல அதுனால எனக்கு எந்த ஒரு லாபமும் வரல. இந்த உலகம் எப்பயுமே திறமைசாலிகளை ரொம்ப சீக்கிரம் புரிஞ்சுக்காது கிருஷ்ணா. என்ன நானே தேத்திக்கிட்டு இந்த உலகம் என்ன திரும்பிப் பார்க்கணும் அதுக்கு என்ன செய்யலாம்னு தேட ஆரம்பிச்சேன். அப்ப எனக்கு கிடைச்ச ஆயுதம் தான் இந்த குளோனிங்." என்று தொடர்ந்தான்.

"இதுக்காக ஒவ்வொரு நாட்டுக்கும் தீசிஸ் அனுப்புனேன். எவனும் உதவி பண்ணல. இவ்வளோ ஏன் யாரும் அத படிக்க கூட தயாரா இல்ல. சிலர் அத படிச்சுட்டு என்ன வந்து பாத்தாங்க. இந்த சின்ன பையன நம்பி எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. யாரோட உதவியும் இல்லாம நானே செய்யலாம்ன்னு முடிவு பண்ணேன். என் வேலைய ஆரம்பிச்சேன். இதுக்காக எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா????? 5வருஷம் விடாம கஷ்டப்பட்டு என் சாம்ராஜ்ஜியத்த உருவாக்குனேன். உண்மையா சொல்றேன் அன்னைக்கி நாள் வரைக்கும் எனக்கு எந்த ஒரு தப்பான எண்ணமும் வரல. சாதிக்கணும் உலகம் என்ன திரும்பி பாக்கணும் அப்டின்ற நினைப்பு மட்டும் தான் இருந்துச்சு. அந்த கஷ்டத்துல தான் MC536 உருவானான். ரொம்ப சந்தோசப்பட்டேன். பெருமைப்பட்டேன். பிரம்மிச்சேன். கர்வப்பட்டேன். அந்த நொடியில தான் இந்த அசோக் அப்டியே மாறிட்டான்."

"அப்போ தான் அவன் உன்ன உருவாக்குனான். அவன் எனக்கே தெரியாத சில விஷயத்த உனக்கு குடுத்துருந்தான். என்னன்னு பாக்குறியா. ஒன்னு உன்னோட கண். இன்னொன்னு உன்னோட பாத ரேகை. என்ன மாதிரியே க்ளோன்கள உருவாக்கி ஏகப்பட்ட குழப்பங்கள உருவாக்கி என்ன மதிக்காத இந்த சமூகத்த பழி வாங்கனும்னு நினைச்சேன். எங்க திரும்புனாலும் என் முகத்தை பாத்து எல்லாரும் பைத்தியமாகணும்னு எதிர்பார்த்தேன். இதுக்கு அவனும் உதவியா இருப்பான்னு நினைச்சேன். அங்க தான் அவன் எனக்கு எதிரா திரும்பினான். இதோ பாத்தியே இந்த வீடியோ இதுல உன்ன தூக்கீட்டு போனது அவன் தான். என்னோட தீசிஸ், என்னோட மிசின்ஸ் எல்லாத்தையும் அழிச்சுட்டான். அப்போ நீ முழுசா தயாராகாம இருந்த. உன்ன பாதியில அழிக்க அவனுக்கு மனசு வராதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்ன அடிச்சுட்டு அவன் என் இடத்துல இருந்தது எனக்கு ரொம்ப வசதியாபோச்சு. அவனோட லேப் எங்க இருக்குன்னு தேட ஆரம்பிச்சேன்."

"அப்போ எனக்கு அவன் மட்டும் தான் தேவைப்பட்டான். அவன் செய்ற ஒன்னொன்னையும் கவனிச்சேன். அப்போ தான் இதோ இந்த சிந்து பத்தி தெரிஞ்சுது. அவன் இவள காதலிச்சான்னு தெரிஞ்சுகிட்டேன். இவள வச்சு அவன தீர்த்துக்கட்ட முடிவு பண்ணேன். அன்னைக்கி தான் பெங்களூர் ரோட்டுல அவன பார்த்தேன். இடிச்சு தூக்கிட்டேன் ஆனா அவன் அப்போ சாகல. அப்பறம் தான் எனக்கு அவன் லேப் பத்தி ஞாபகம் வந்துச்சு. திரும்பி வந்தப்போ தான் அங்க நீ அவன பாத்துகிட்டு இருந்த. அப்ப எனக்கு அது நீ தான்னு தெரியாது. தெரிஞ்சுருந்தா அப்பவே உன்னையும் முடிச்சிருப்பேன். எனக்கு இந்த லேப் எங்க இருக்குன்னு தெரியாமயே போயிருக்கும். அவன தூக்கிட்டு வந்ததுக்கு அப்பறம் தான் எனக்கு தெரிஞ்சுது அந்த லேப் திறக்கணும்னா அதுக்கு நீ வேணும்னு."

"உன்ன எங்க போய் தேடுறதுன்னு நெனசுகிட்டு இருக்கப்ப தான் அந்த நியூஸ் பேப்பர் செய்தி என் கண்ணுல பட்டுச்சு. இந்த பழம் நழுவி பால்ல விழுந்துடுச்சுன்னு சொல்லுவாங்க பாத்தியா அது மாதிரி அவன் எங்க இருந்தானோ அதே இடத்துக்கு நீ வந்த. உன்ன அவன் லேப்ல தான் வச்சுருப்பான்னு நினைச்சேன். பரவால்ல நானும் ஒரு பயங்கரமான புத்திசாலிய தான் உருவாக்கிருக்கேன். உன்னையும் சும்மா சொல்லக்கூடாது அவன பத்தின எல்லா உண்மையையும் கண்டுபிடிச்ச. நீ நெனச்சுகிட்டு இருந்த எல்லாமே நீயா கண்டுபிடிச்சன்னு. அது தான் இல்ல. உன்ன ஒன்னொன்னா கண்டுபிடிக்க வச்சது நான். இதோ இந்த சிந்து இவள அதுக்கு நான் பயன்படுத்திக்கிட்டேன். சாரி இவளோட காதல நான் பயன்படுத்திக்கிட்டேன். ஆமா..... இவ உன்ன காதலிச்சா..... காதலிக்கிறா..... உனக்கு இன்னொரு விஷயம் தெரியுமா இந்த சிந்து நான் நடிக்க வச்ச ஆள்.", என்றான் கேலியாக. நான் சிந்துவை பார்த்தேன். என்னைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து அழுதுகொண்டிருந்தாள்.

"அவன் உன் பாத ரேகையையும் உன்னோட கண்ணையும் பாஸ்வோர்டா வச்சுருப்பான்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. அதனால தான் நீ இப்போ சாகப்போற", என்றான். சிந்து குறுக்கிட்டு, "உனக்கு தான் லேப் கெடச்சுடுச்சுல்ல அவன விடு. நாங்க போயிடுறோம். நீ என்ன வேணும்னாலும் செஞ்சுக்கோ.", என்றாள். "சாரி சிந்து..... நான் இவ்ளோ நேரம் உண்மையா சொன்னது உங்க ரெண்டு பேரையும் உயிரோட விடுறதுக்கு இல்ல. உங்கள கொன்னுட்டா..... உங்கள காணாம்னு கேஸ் குடுப்பாங்க தேடுரப்போ நான் மாட்டிப்பேன். உங்க ரெண்டு பேர் கதாப்பாத்திரம் இந்த கதைல ரொம்ப ரிஸ்க்கான கதாப்பாத்திரமா இருக்கே..... ம்ம்..... ஒன்னு பண்ணலாம். உங்கள மாதிரியே ரெண்டு க்ளோன் செஞ்சு அவங்கள உங்க வீட்டுக்கு அனுப்பிட்டு உங்கள கொன்னுடலாம். உங்க கதையும் முடிஞ்சுடும் யாருக்கும் சந்தேகமும் வராது.", என்று கூறி சினிமா வில்லன்கள் போல சிரித்தான்.

'கமான் கிருஷ்ணா..... எதாச்சு யோசி..... இங்க இருந்து தப்பிக்கணும் அதே நேரத்துல இந்த பிரச்சனைக்கும் ஒரு முடிவு கட்டணும். யோசி யோசி.....' என்று என்னுள் நானே சொல்லிக்கொண்டேன். அந்நேரம் என் கை விடுபட்டதுபோல் இருந்தது. ஆம் சிந்து தான் என் கட்டுகளை அவிழ்த்துவிட்டிருந்தாள். நான் வேகமாக அங்கே இருந்த கருவிகளை நொறுக்க ஆரம்பித்தேன். அவன் என்னை தடுக்க முற்பட்டான். அவனை வெளியே தள்ளி நான் என் வேலையே தொடர்ந்தேன். என்னுடன் சிந்துவும் சேர்ந்துகொண்டாள். உடைப்பது சாத்தியமில்லை என்று எண்ணி அந்த கருவிகள் அனைத்தையும் கொளுத்தினேன். வேதியல் பொருட்கள் ஆதலால் வேகமாக தீ பற்றியது.

கோபத்தில் கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி எரிந்து என்னை தாக்கினான். நானும் பதிலுக்கு அவனை தாக்கினேன். அருகில் இருந்த தூணில் அவனை கட்டினேன். "மிஸ்டர்.அசோக்..... இவ்ளோ நேரம் நீங்க பேசுனீங்க நான் கேட்டேன். இப்போ நான் பேசுறேன் நீ கேளு", என்றேன் அதிகாரமாக.

"அது என்னது நீங்க பிறக்குரப்போவே ஏகப்பட்ட திறமையோட பிறந்தீங்களா????? ஏன்டா ஒரே மாதிரி ஜெராக்ஸ் எடுக்குறதுல என்னடா திறமை இருக்கு????? இதோ என்ன உருவாக்குனான் பார் ஒருத்தன். என்ன தேடி ஒரிஜினல் உன்ன வர வச்சான் பார். அவன் தான் திறமைசாலி. ஏன் இதுக்கு முன்னாடி யாரும் குளோனிங் பண்ணாதே இல்லையா????? நீ தான் இத உருவாக்குனியா????? ஏற்கனவே இருந்த ஒன்ன நீ பயன்படுத்திக்கிட்ட அவ்ளோ தான். இப்போ உன்ன என்ன பண்ணலாம். உன்ன உயிரோட விட்டா நீ இல்லாத அநியாயம் எல்லாம் பண்ணுவ. உன் கதாபாத்திரம் ரொம்ப சுவாரசியமானது..... அத மிஸ் பண்ண எனக்கு மனசே வரலப்பா..... ம்ம்..... சரி நீ என்ன கொல்லனும்னா இன்னொரு க்ளோன் செய்யணும். நான் உன்ன கொல்லனும்னா இன்னொரு க்ளோன் தேவை இல்ல. அதான் நான் இருக்கேனே. நீ செத்துரு அசோக்.", என்று கூறி அவன் கை கட்டை அவிழ்த்து எரிந்துகொண்டிருந்த தீயில் தள்ளினேன்.

சிந்துவை அழைத்துக்கொண்டு வெளியே வந்து லேப் கதவை மூடினேன். உள்ளே இருக்கும் தீ அணைந்து பொருட்கள் மிஞ்சினாலும் என் அனுமதி இல்லாமல் யாரும் அதை திறக்கக்கூடாது என்று எண்ணினேன். ஒருவேளை என் கவனம் இல்லாமல் ஏதனும் நடந்துவிட்டால்..... ஆம் அதை நான் செய்து தான் ஆகா வேண்டும்.

கீழே இருந்த கத்தியை எடித்து என் இரண்டு பாத தோலையும் நறுக்கி எடுத்தேன். இனி நானே நினைத்தாலும் இந்த லேப் உள்ளே செல்ல முடியாது. 


"YOU JUST CAN'T DO THIS MAN".....

அன்று முதல் அந்த அழகான குடும்பத்தில் "அவனாக நான்" வாழ்ந்து வருகிறேன்.....

அன்று 14-3-2013. சிந்துவின் பிறந்தநாள். என்னுடன் எங்கள் வீட்டில் இருந்தாள். அப்போது தொலைக்கட்சியில் ஒளிபரப்பான செய்தி:

"ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ஒரு ஆராய்ச்சிக்கூடம்..... அடிக்கடி உள்ளே மனிதர் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவிவருகிறது....."

நானும் சிந்துவும் திகிலுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.....


Reference for the article of human cloning: www.newscientist.com/article/dn3217-first-cloned-baby-born-on-26-december/

Comments

Post a Comment