விளை(லை)நிலம்.....

வெட்டவெளி. கண் பார்க்கும் தூரம் வரை பச்சை நிறம் கண்ணை பறிக்கிறது. தென்னை மரத்தில் வேலி அமைத்தது போன்ற ஒரு எண்ணம் கூட தோன்றும். அப்படி ஒரு வனப்பு. காலையும் மாலையும் கிளிகளும் குயில்களும் கூச்சலிடும். அந்த பாடல்களை கேட்டுக்கொண்டே காலத்தை ஓட்டிவிடலாம். இப்படி ஒரு சூழலை விட்டுசெல்ல யாருக்கு தான் மனம் வரும்??

தன் வாழ்நாள் முழுவதும் அங்கேயே கழித்துக்கொண்டிருந்த முத்தரசனுக்கும் இதே கவலை தான். இருந்தாலும் அந்த இறைவன் தன்னை அழைக்கும் நேரத்தில் போகாமலா இருக்க முடியும்??

முத்தரசன் ஒரு விவசாயி. இன்று அவரிடம் சொந்தமாக நிலங்கள் இருந்தாலும், அவர் தன் வாழ்க்கையை தொடங்கியது வேறொருவரின் நிலத்தில் தான். சிறு வயதில் இருந்தே விவசாயத்தில் ஈடுபட்டதால், விவசாய நிலத்தை தன் தாயாகவே மதித்தார். எனவே நிலத்தை பாதிக்கும் எதையும் அவர் பயன்படுத்தியதே இல்லை. காலத்திற்கு ஏற்ப பயிரிட்டு விளைச்சல் கண்டு வந்தார்.

இப்படி பிறர் நிலத்தையே தாயாக எண்ணிய முத்தரசன் தன் நிலத்தை கவனிக்க மாட்டாரா என்ன?? தன் நிலத்தில் தென்னை மரங்களை வெளியாக அமைத்து, மாமரங்களையும் கொய்யமரங்களையும் தூண்களாக பதித்து, பயிரிட்டு நிலத்திற்கு உயிரூட்டி வந்தார். அவரது நிலம் அவருக்கு மட்டும் தாயாக அமையாமல் குயில்கள், கிளிகள், குருவிகள், அணில்கள், மண்புழுக்கள் போன்ற அநேக உயிர்களுக்கும் தாயாக இருந்து வந்தது.

இன்று மரணப்படுக்கையில் இருக்கும்போதும் அந்நிளத்தாயை பிரிய அவரது மனம் இடம்தரவில்லை. தென்றலின் தீண்டலை ஸ்பரிசித்த அவரது தேகம் இன்று தன் இறுதி காற்றை ஸ்பரிசித்துக்கொண்டிருந்தன. குயில்களின் பாடலையும், கிளிகளின் குரல்களையும் கேட்டிருந்த அவரது செவிகளில் மரண ஓலம் ஒலித்துக்கொண்டிருந்தன.

அத்தருணத்திலும் தன் நிலத்தாயை யாரிடமாவது ஒப்படைக்க அவரது மனம் ஏங்கியது. தன் மகன்கள் மூவரையும் அழைத்தார் முத்தரசன். அவர்களை பார்த்து கண்ணீர் மல்க "அடே இது நா தாயா மதிக்கிற மண்ணு டா. இத கலங்க விட்டுராதிங்கடா" என்று கூறினார்.

அவரது மகன்கள் அளவிலான், அனகன், எண்குணன் அவரை கண்ணீருடன் சூழ்ந்து நின்றனர். மரணத்தருவாயில் தன் நிலத்தை தன் மகன்களுக்கு சரிபங்காக பிரித்து கொடுத்தார். பிரித்ததும் முத்தரசனின் உயிர் பிரிந்தது.

தந்தை மறைந்த துக்கத்தில் சகோதரர்கள் உறைந்திருந்தனர். காலமும் நகர்ந்தது. ஊரார் அவர்களை தேற்றி விவசாயத்தில் இறக்கினர். தந்தை வழியை பின்பற்றி இயற்கை உழவு செய்தனர்.

நாட்களும் சென்றன, விவசாய முறையும் மாறின. அண்ணன்மார் இருவரும் நிலத்தில் இரசாயன உரங்களை பயன்படுத்த எண்ணினார். என்ன செய்வது தந்தையை மறந்தது போலவே தந்தையின் சொல்லையும் மறந்தனர். எண்குணன் தன் அண்ணன்கள் அளவிலான், அனகன் இருவரையும் மன்றாடி கேட்டும் அவர்கள் இறங்கவில்லை.

இரசாயன உரத்தால் அவர்கள் விளைச்சல் உயர்ந்தது. அளவிலானும் அனகனும் பன்மடங்கு உற்சாகம் அடைந்தனர். எண்குனனை ஏளனம் செய்தனர். இருந்தும் எண்குணன் தன் தந்தையின் சொல்லை பின்பற்றினான். அவர்கள் எண்குணனை மாற்றவும் முயற்சித்தனர். அவன் மசியவில்லை. விளைச்சல் குறைந்தாலும் நிலத்தை காக்க பாடுபட்டான்.

அண்ணன்களிடம் சில காலம் பணம் கொழித்தாலும் அவர்களது செயல் தன் வேலையே காட்ட ஆரம்பித்தது. நிலத்தில் இருந்த தாது குறைந்து விளைச்சலை குறைத்தது. நிலம் வரண்டது. வாழ்வும் இருண்டது. அந்நிலம் எதற்கும் பயனில்லாமல் போனது. அளவிலானும் அனகனும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். ஒரு புறம் கடன்காரர்கள் தாங்கள் கொடுத்த கடனை கேட்டு வருத்தினர். ஒரு புறம் பசி வாட்டியது.

அந்நேரம் ஒரு மருந்து நிறுவனம் தங்கள் தொழிற்சாலையை நிறுவ நிலம் தேடி வந்தனர். அளவிலானும் அனகனும் தங்கள் நிலத்தை, தங்கள் தந்தையின் உழைப்பை விற்க முன்வந்தனர். எண்குணன் தடுத்தும் அவர்கள் கேட்கவில்லை. காரணம் பசி அவர்கள் காதை அடைத்தது, கடன் கண்ணை மறைத்தது.

விற்ற பணம் கடன் அடைப்பதற்கே சரியாக இருந்தது. இருந்த மீதியைக்கொண்டு அளவிலானும் அனகனும் பட்டணம் சென்று சிறுதொழில் தொடங்கினர். எண்குணன் அயராது விவசாயத்தில் கவனம் செலுத்தினான். தந்தையை போலவே உழைத்து முன்னேறினான். தானும் தன் நிலத்தை தாயாக மதித்து வாழ்ந்தான்.

காலங்கள் உருண்டோடின...

ரசாயான கழிவுகளாலும், தாது குறைபாட்டாலும் விவசாய நிலங்கள் அழிந்து வந்தன. பெரிய பணக்காரர்களும் செல்வந்தர்களும் உண்ணும் உணவிற்கு கோடி கோடியாக கொட்டித்தர முன்வந்தனர். ஆனால் விவசாயம் செய்ய ஆளும் நிலமும் இல்லை.கடும் பஞ்சம் நிலவியது.

என்றும் இயற்கை உழவு செய்த எண்குணன் விவசாயம் செய்து விளைச்சல் கண்டான். குறைந்த விளைச்சல் ஆனாலும் அதிக இலாபம் அடைந்தான். "தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை" என்பது போல தந்தையின் பாதையை பின்பற்றி உயரம் கண்டான். உயர்ந்தாலும் தன்னை உயர்த்திய தன் நிலத்தை போற்றி பாதுகாத்தான்...

"இயற்கை வளத்தை காப்போம்..... விளைநிலத்தை "விலை"நிலமாகாமல் தவிர்ப்போம்..... ரசாயன பொருட்களை குறைப்போம்....."


                                ----- பசுமை தாயகம் போற்றுவோம் -----

இப்படிக்கு,
நான்.....

Comments

Post a Comment